Home » காதல் » முத்தம் என்ன செய்யும்?

முத்தம் என்ன செய்யும்?

என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு.

அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி விவாகரத்து கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையில், தாம்பத்திய உறவு என்பது ஈர்ப்பும் ஆர்வமும் அற்ற ஒரு விஷயமாக, ஏதோ குளிப்பது போல் ஒரு கடமையாக அல்லது கோடைமழை போல் சட்டென்று கொட்டி அடங்கிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது.

ஆர்வமற்ற இதுபோன்ற தாம்பத்திய உறவு இருக்கும் தம்பதியர்களுக்குள், மற்ற எந்த விஷயத்திலும்கூட பெரிய நெருக்கம் இருப்பதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈர்ப்பும் ஆர்வமும் ஏன் குறைகிறது?

கணவனோ அல்லது மனைவியோ, குறிப்பிட்ட தன் துறையில் தான் வேகமாக முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் ‘வேலை வேலை’ என்று கவனம் முழுக்க வேலை பற்றியே சிந்திக்கும்போது, தாம்பத்திய உறவில் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போகலாம்.

அதிக வேலை அல்லது சரியான நேரத்தில் முடியாத வேலையால் ஏற்படும் உடல் அசதியும்கூட இதுபோன்ற ஆர்வமின்மைக்கு இட்டுச் செல்லலாம். கணவருக்கோ மனைவிக்கோ ஒருவரைப் பார்த்தவுடன் மற்றவருக்கு கிளர்வான உணர்வை ஏற்படுத்தும் டோப்பாமைன், நைட்ரிக் ஆக்ஸைடு, ஆக்ஸிடோஸின், டெஸ்டோஸ்டிரான் போன்ற சமாச்சாரங்கள் உடலில் போதுமான அளவில் இல்லாமல் குறைவாக சுரக்கும் நிலையும் காரணமாகலாம்.

சில வீடுகளில் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ சில குண நலன்களால் ஒருவர் மேல் மற்றவருக்கு மனசில் மரியாதை இல்லா ஒட்டாத நிலை ஏற்படுவதும் காரணமாகலாம்.தாம்பத்தியத்தைத் தவிர வெளியே வேறு யாருடனாவது இருக்கும் ஆர்வத்தாலும் இப்படி தம்பதிகளுக்குள் ஈர்ப்பு குறையலாம்.. இதுபோல் இன்னும் ஏகப்பட்ட காரணங்கள்!

ஆனால், இந்த எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. சொல்லப் போனால் இந்தக் காரணம் பெண்களில் பலருக்கு மிகவும் பொருந்தும்.அது.. தாம்பத்திய உறவு என்பது முறையாக, அதன் சுவாரஸ்யத்துடன் இதமாக அறிமுகம் ஆகாமல் போவதால், அதன் பேரில் சில பெண்களுக்கு ஏற்படும் பயமும் எரிச்சலும் கலந்த கஷ்ட உணர்வு!

எடுத்த எடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாதத்தை அள்ளிப் போட்டால் சாப்பிடத் தோன்றுமா? அந்தப் பாத்திரத்தைப் பார்த்தவுடனே இருக்கும் பசியும் அல்லவா பறந்து போகும்!

என்னதான் பசிக்கு சாப்பிடவேண்டி இருந்தாலும் சாப்பிடத் தூண்டும் வகையில், அதை அழகாகப் பார்வையாக வைத்தால்தான் சாப்பிடும் ஆர்வம் வருகிறது. என்னதான் தேர்வுக்கு மார்க் எடுப்பதற்காக படிக்க வேண்டி வந்தாலும், ஆசிரியர் சுவாரஸ்யமாக சொல்லிக் கொடுத்தால்தான் அதைப் படிக்கவே ஆர்வம் வருகிறது.

அதேபோல்தான்.. என்னதான் மனதை மயக்கும் விஷயமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, இதமாக அதை அறிமுகப்படுத்தும் போதுதான் தாம்பத்திய உறவும்கூட பல பெண்களை விரும்பி ஆர்வம் கொள்ள வைக்கிறது.

பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்.

இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறைவேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.

அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரிசித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.

முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லை ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.முதலில் கணவன் _ மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.

ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம்தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!

சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்துணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்தமிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதிகரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!

குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்துவிட்டு,முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய இரத்த ஓட்டத்தில் கலந்து, மனிதர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.

வேகமான இரத்த ஓட்டம் உடல் திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இருக்கின்றன ‘அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்’

வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற்கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார்பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்தமிடுங்கள்!

Leave a Reply