காதலர்கள் காதலிக்கத் துவங்கியதும் செய்யும் முதல் வேலை, கடற்கரை, பூங்கா, திரையரங்கு போன்று பொழுதுபோக்கு இடங்களில் சந்திப்பதுதான். இதுதான் எல்லோருக்குமேத் தெரியும் என்று சொல்லாதீர்கள்.
அடுத்ததாக செய்வது என்னத் தெரியுமா? பரிசுப் பொருட்கள் கொடுப்பது… இந்த பரிசுப் பொருட்களைக் கொடுப்பதில் பல வகை உண்டு. ஏதாவது முக்கியமான நாளன்று, தனது துணையை மகிழ்விப்பதற்காக பரிசு கொடுப்பது ஒரு வகை. இவர்கள் இயல்பானவர்கள். இதனால் எந்த பிரச்சினையும் எழாது.
அதாவது பிறந்த நாள், முதன் முதலாக சந்தித்த நாள், முதல் மாத சம்பளம், சம்பள உயர்வு, புத்தாண்டு, காதலர் தினம் போன்ற முக்கிய நாட்களில் காதலன் காதலிக்கோ, காதலி காதலிக்கோ பரிசுகள் அளிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நாட்களில் பரிசுப் பொருட்கள் கொடுத்துவிட்டீர்களானால், இந்த நாட்களை எந்த ஆண்டும் மறக்காமல் அதனைச் செய்ய வேண்டியது அவசியம் என்பதை மறக்கக் கூடாது.
ஏதாவது ஒரு நாள் மறந்துவிட்டால்.. அவ்வளவுதான்.. உங்க எண்ணத்தில் நான் இருந்தாதானே ஞாபகம் வரும் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
அடுத்தது, மிக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, தங்களது பந்தாவிற்காக பரிசாக வழங்குவது இரண்டாவது ரகம். தான் பெரிய பணக்காரன் என்று நினைத்துத்தான் இந்த பெண்/ஆண் தன்னை காதலிக்கிறார் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து தங்களது பணக்காரத்தனத்தை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.
ஆனால் இந்த பரிசுப் பொருள் அன்பால் வாங்கப்பட்டிருக்காது. மேலும், இப்படி விலை உயர்ந்த பரிசுப் பொருளை காதலிக்குக் கொடுக்கும் போது பல பிரச்சினைகள் எழும். அதாவது, அந்த பெண், இவ்வளவு விலை உயர்ந்த பரிசுப் பொருளைப் பார்த்ததும், இதற்கு ஈடாக தன்னால் எதுவும் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதும், இதற்கு தான் ஏற்புடையவளா என்று சந்தேகிப்பதும், அதனை வீட்டிற்குக் கொண்டு செல்ல முடியாத நிலையிலும் இருப்பாள்.
ஒரு வேளை அந்தப் பரிசுப் பொருளை மேற்கூறிய ஏதாவது ஒரு காரணத்தால் அவள் மறுக்க நேர்ந்தால் அங்கு காதலர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படலாம்.
வேறு சில ஆண்கள் உள்ளனர். ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து அதற்கு பதிலாக மற்றொருப் பரிசைக் கேட்பது. அதாவது முத்தம், தொடுதல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியான விஷயம் நடக்கும் இடத்தில் பெண் ஒரு போகப் பொருளாகப் பார்க்கப் படுகிறாள் என்று காதலி நினைப்பாள். ஒரு புடவை வாங்கிக் கொடுத்து முத்தம் கேட்கும் இவன், நாளை ஒரு தங்கக் கம்மல் வாங்கிக் கொடுத்தால் என்னுடன் வருகிறாயா என்று கேட்க மாட்டானா என்றுத் தோன்றும்.
எனவே பரிசுகள் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சாதாரணமாக பரிசு கொடுக்க நினைப்பவர்கள், அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு வேறு ஒருவருக்கு என்று பரிசை தேர்ந்தெடுக்கச் சொல்லாம். ஏன் என்றால் இதை ஏன் வாங்கினீர்கள் என்று திட்டு வாங்க வேண்டாம்.