Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » கமுக்கமாய் காதலி!

கமுக்கமாய் காதலி!

சின்ன வயதில்… உன்னிடம் இருந்து எதையாவது நான் பிடுங்கினால், அழுதுகொண்டே ஓடிப்போய் என் அம்மாவிடம் புகார் சொல்வாயே, அது மாதிரி இப்போதும் நான் உன் இதயத்தைப் பிடுங்கிக்கொண்டதை என் அம்மாவிடம் சொல்வாயா? என்றேன்.

சேச்சே!  டேய் அவளோடதை அவளிடமே கொடுத்து விடு!? என்று அப்போ சொல்வது மாதிரியே இப்போதும் உன் அம்மா சொல்லி விட்டால்? என்றாய் அழகு காட்டி.

கண்டிப்பா அப்படித்தான் சொல்வேன்! என்று திடீரென கதவுக்குப் பின்னாலிருந்து வெளியே வந்தார் என் அம்மா.

அய்யய்யோ… அம்மா எல்லாத்தையும் கேட்டுட்டாங்க! என்றாய் அதிர்ச்சியோடு!

எத்தனை நாளா நடக்குது இந்தக் கதை? ம்!? என அம்மா மிரட்ட,  இல்ல… வந்து… என்று தடுமாறினாய்.

என்ன… என் பையனைக் காதலிக்கிறியா? என்றார் அம்மா குரல் உயர்த்தி.

அய்யய்யோ… எனக்குத் தெரியா தும்மா… எங்கிட்ட இப்பதான் சொன்னா!? என்று நான் சொன்னதைக் கேட்டதும், உன் கண்களில் கோபமும் கண்ணீரும் போட்டி போட்டு வெடிக்கப் பார்த்தன.

டேய்! போதும்டா உன் விளையாட்டு… பாவம், அழுதுடப் போறா!? என்றார் அம்மா.

இவளா பாவம்? இப்ப நீங்க மட்டும் இல்லைனு வெச்சுக்கோங்க… அப்படியே இந்நேரம் பாய்ஞ்சு வந்து என் தலை யைப் புடிச்சி பத்ரகாளி மாதிரி ஆட்டியிருப்பா! என்றேன்.

ம்… அதெல்லாம்கூட செய்வியா நீ? என்று உன்னை அதட்டிய அம்மா, இப்ப அப்படி செய்யணும் போல இருக்கா? என்று சிரித்தார்.

ம்! என்று தலையாட்டிய அதே வேகத்தில், இல்லே… என்பது போலத் தலையாட்டினாய் நீ.

என்ன வேணாலும் செய்துக்க. இனிமே இவன் உன் பிள்ளை! என்று என்னை உனக்குத் தத்துக் கொடுத்து விட்டு உள்ளே போய்விட்டார் அம்மா. அய்… அப்ப அம்மாவுக்கு ஓ.கே-வா? என்று துள்ளிக் குதித்தாய்.

அவங்களுக்கு எப்பவோ ஓ.கே! நான்தான் சும்மா உங்கிட்ட கலாட்டா பண்ணச் சொன்னேன் என்றேன்.

உன்னை..? என்று அருகே வந்த உன்னிடம், இப்போ நீ என்கிட்ட வந்தேன்னா, நான் உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துடுவேன் என்று மிரட்டினேன்.

ஜகா வாங்கிய நீ, உன் தலையைப் பிடிச்சு உலுக்குற அளவுக்கு உன்மேல எனக்குக் கோபம் இல்லையே என்றாய்.

ஆனால்… உன்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்குற அளவுக்கு உன்மேல எனக்குக் காதல் இருக்கே என்றேன்.

வாடா… எந்த ஊரு நீ… விட்டா மைக் செட் கட்டி ஊருக்கே சொல்லச் சொல்லுவ போலிருக்கே. இதெல்லாம் கமுக்கமா செய்யணும்டா என்றாய்.

கமுக்கமாவா… அப்படின்னா? என்றேன் புரியாத மாதிரி.

இப்படி என்று என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிப்போனாய்!

என் இதயம்
பணயமாக இருக்கட்டும்
எனக்கு உன் காதலைக்
கடனாகக் கொடு.

அதற்கான வட்டியாக
தினமும் நான் உனக்கு
என் காதலைக் கட்டினாலும்
ஒரு மகா மோசமான
கந்து வட்டிக்காரியைப் போல
உன் இதயம் மூழ்கிவிட்டது
என்று
கடைசிவரை என் இதயத்தை
நீ திருப்பியே தராதே!

தபூ சங்கர்-

Leave a Reply