Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » சிறு தெய்வங்களும் ஒரு பெருந் தெய்வமும்!

சிறு தெய்வங்களும் ஒரு பெருந் தெய்வமும்!

கோயில் திருவிழாவன்று, கூத்தும் ஆரம்பித்துவிடும். ஊரில் இருக்கிற எல்லா கன்னிப் பெண்களும் வரிசையாக ஒரே நேரத்தில் பற்ற வைக்கிற பொங்கல் பானைகளில் எந்தப் பானை முதலில் பொங்குகிறதோ, அந்தப் பானைப் பொங்கல்தான் சாமிக்குப் படைக்கப்படும்.

இதற்குப் பின்னால் இன்னொரு நம்பிக்கையும் உண்டு. எந்தப் பெண்ணாவது எவன் மீதாவதுஆசை வைத்திருந்தால்… அவள் வைத்திருக்கும் பானை பொங்கினால்தான் அவள் ஆசை நிறைவேறும். இல்லை என்றால் அரோகராதான் என்பதே அது. இந்தக் கொடுமைக்குப் பயந்துதான் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் காதல் என்றாலே கத்திரிக்கா என்று கழன்று ஓடிவிடுவார்கள்.

ஆனால்… அதையெல்லாம் மீறி என் மீது உயிரை வைத்துவிட்ட நீ, இன்று பொங்கல் வைத்திருக்கிறாய். ?எங்க பானைதான் முதலில் பொங்கணும் சாமி என்று எல்லாப் பெண்களும் வேண்டிக்கொண்டு இருந்தார்கள். சாமியையும் அவ்வப்போது என்னையும் நீ பார்க்கும் கலங்கடிக்கும் பார்வை என்னை ரொம்ப ரொம்பக் கலவரப்படுத்தவே, நான் சாமியிடம் ஓடினேன், சாமி ஏதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தது.

ஏய் சாமி… நீ என்ன முணுமுணுத்துட்டிருக்கே? என்றேன் ஆச்சரியமாக. ச்சு… சத்தம் போடாதே… உன் ஆளு வெச்சிருக்கும் பொங்கல் பானைதான் முதலில் பொங்கணும்னு நான் எங்கப்பனை வேண்டிட்டு இருக்கேன்… இல்லனா காதல் என்னைக் கோச்சிக்கும்! என்றது சாமி.

என்னது… காதல் உன்னைக் கோச்சுக்குமா? நீ ஏன் காதலுக்குப் பயப்படுறே? காதல் என்ன அவ்ளோ பெரிய கடவுளா? என்றேன்.

கத்தாதே… நாங்களெல்லாம் சிறு தெய்வங்கள். காதல்தான் பெருந்தெய்வம் என்ற சாமி, பொங்கிடுச்சு… பொங்கிடுச்சு என்று கத்த, நான் திரும்பிப் பார்த்தேன். அது உன் பொங்கல் பானை!

நீயும் நானும் ஒரு திகில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகையில், படத்தில் திகில் காட்சிகள் ரொம்ப அதிகம் என்றாய்.

ஆமாம். மொத்தம் இருபத்தேழு என்றேன்.

திகில் காட்சிகளை எல்லாம் எண்ணினாயா? என்றாய் ஆச்சரியத்தோடு.

இல்லையில்லை… ஒவ்வொரு திகில் காட்சிக் கும் நீ பயந்துபோய் என் தோளில் முகம் புதைத்துக் கொண்டாய் அல்லவா… அதை எண்ணினேன் என்றேன்.

ச்சீ என்று வெட்கப் பட்டு முகத்தை உன் கைகளில் புதைத்துக் கொண்டாய்.

என்ன அநியாயம் இது. பயத்துக்கு மட்டும் என் தோள்கள் வேண்டும் உனக்கு. ஆனால், வெட்கம் வந்தால் மட்டும் வேண்டா மாக்கும் என்றேன்.

பயம் வரும்போது உன் தோளில் முகம் புதைத்துக் கொண்டால், உடனே என் பயம் போய்விடும். ஆனால், வெட்கம் வரும்போது, அப்படிச் செய்தால், என் வெட்கம் இன்னும் அதிகமாகிவிடுமே என்று சிரித்தபடி ஓடிப் போனாய்!

அழகு நிலையத்துக்குள்
நுழைந்தாய் நீ,
அங்கிருக்கும்
அழகு சாதனங்கள்
அலறின
?அய்… அழகு வருது? என்று!

புதிய புடவையில் வந்து
?புடவை நல்லாருக்கா?
என்று கேட்டாய் என்னிடம்,
?நல்லா இல்லேனு சொல்லு?
என்று கெஞ்சியது
சற்றுமுன் நீ களைந்து
கொடியில் போட்டிருந்த புடவை.

தபூ சங்கர்-

Leave a Reply