குழந்தையின் கையிலிருந்த மிட்டாயைப் பிடுங்கி ஒளித்துக்கொண்டு ?காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்று விளையாட்டு காட்டினாய் நீ. குழந்தையோ இல்லே..! என்றபடி உன்னையே சுற்றிச் சுற்றி வந்தது.
நானும் ஒரு குழந்தைதான். கையில் மனதை வைத்துக்கொண்டு, நீ எப்போது பறிப்பாய் என்று உன்னையே சுற்றிச் சுற்றி வரும் குழந்தை.
நீ என் மனதைப் பறித்துக் கொண்டு காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. நானும் இல்லே..! என்று உன்னைச் சுற்றி வர மாட்டேன். பதிலாக, நீ பறித்த அடுத்த நொடியே ?பறிச்சுட்டா… பறிச்சுட்டா! என்று கத்தியபடியே உலகமெல்லாம் ஓடுவேன்.
நீ என் மனதை, அருகே வந்து தொட்டுப் பறிக்க வேண்டும் என்பதில்லை. கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து ஒரு புன்னகை வலை வீசினாலோ… ஒரு பார்வைத் தூண்டில் வீசினாலோகூடப் போதும். காக்காய் உட்கார்ந்ததும் விழும் பனம்பழமாய் என் மனது உன் மடியில் விழுந்துவிடும்.
அதை எங்கே ஒளித்து வைத்துக் கொள்வது என்கிற கவலையோ, சிரமமோ உனக்கு வேண்டாம். நீ பறித்தவுடன் அதுவே ஓடிப்போய் உன் இதயத்துக்குள் ஒளிந்துகொள்ளும்.
கடைசியில் அந்தக் குழந்தையிடம் நீ மிட்டாயைத் திருப்பிக் கொடுத்த மாதிரி, என் மனதினை எனக்குத் திருப்பித் தர வேண்டியதில்லை. அது உனக்கே சொந்தமானது.
ஒருவனின் கையில் ஒப்படைப் பதற்காகவே ஒரு மகளைப் பெற்று வளர்க்கும் பெற்றோரைப்போல, நான் உன்னிடம் ஒப்படைப்பதற்காகவே என் மனதை வளர்த்திருக்கிறேன்.
மகளைக் கொடுத்தவர்கள்கூட அவ்வப்போது அவள் புகுந்த வீட்டுக்கு வந்து எப்படிம்மா இருக்கே? என்று கேட்டுவிட்டுப் போவார்கள். ஆனால்… நான் உன்னைப் பார்க்க, தினம் தினம் வந்தாலும் என் மனதைப் பற்றி ஒரு நாள்கூட… ஒரு வார்த்தைகூட உன்னிடம் கேட்க மாட்டேன்.
என் பேச்சையெல்லாம் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த நீ, உன் மனதைப் பற்றி ஒன்றும் கேட்க மாட்டாய். ஆனால், அதற்குப் பதிலாக என்னையே கேட்பாயே! என்றாய் தோரணையாக.
?ச்சே… ச்சே.. நான் கேட்க மாட்டேன். ஆனால், நீ பறிக்கிற என் மனதே எனக்கு உன்னைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விடும்? என்றேன்.
ஆசை… ஆசை!? என்று சிரித்தாய். அவ்வளவுதான்… அந்தச் சிரிப்பில் விழுந்தது என் மனது, உன் மடியில்!
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
ஆனால்
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறதே.
இந்த வேப்ப மரத்தின்
பழங்கள் இனிக்கிறதே என்றாய்
ஒன்றும் தெரியாதவளைப் போல்.
இனிக்காதே பின்னே…
இப்படி நீ
மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடினால்.
வேடந்தாங்கலுக்குப் போகலாமா என்றாய்.
ஆயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்தெல்லாம்
பறவைகள் வந்து அங்கே
குவியும் போது
அருகிலிருக்கும் நீ போகவில்லை
என்றால் அது சரணாலயமா என்ன?!
தபூ சங்கர்-