Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » ஆ… அந்த மந்திரச்சொல்!

ஆ… அந்த மந்திரச்சொல்!

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கேள்வி ஒன்றுக்குத் தவறாக பதில் சொன்ன என்னை, சரியாகப் பதில் சொன்ன உன்னைவிட்டுக் கொட்டச் சொன்னார் வாத்தியார்.

கொட்டுக்கள் புதிதல்ல… இதற்கு முன் கொட்டிய எல்லோருமே, எப்போதோ அவர்களுக்கு நான் செய்த இம்சைகளுக்கெல்லாம் பழி தீர்த்துக் கொள்வதுபோல, கோபத்தை என் தலையில் காட்டுவார்கள்.

ஆனால் நீயோ உன் கொட்டின் மூலம், உன் பிரியத்தைக் காட்டி விட்டாய். என்னை வலிக்காமல் கொட்டிய முதல் கை உன்னுடையது தான். ஒருவேளை இது பெண்ணின் கை என்பதனால் வலிக்கவில்லையோ என்று நினைத்துவிட முடியாது. என்னைக் கொட்டிய கைகளில் பலது பெண் கைகள்தான்.

கொட்டிய கைகளுக்குச் சொந்தக் காரிகள், வகுப்பு முடிந்ததும் நல்லா வலிச்சிச்சா? என்று கொக்காணிச் சிரிப்பு காட்டிப் போவார்கள். ஆனால் நீயோ வகுப்பு முடிந்ததும் ரொம்ப வலிக்குதா? என்று இதமாகக் கேட்டாய். நீதான் கொட்டவே இல்லையே! என்று நான் சொன்ன பதிலைக் கேட்டு,  வெட்கமாய் ஓடிப்போனாய்.

எப்படி என்றே தெரியவில்லை… அதற்குப் பிறகு நான் யாரிடமும் கொட்டு வாங்கியதில்லை. படிக்கிற பையனாக மாறிவிட்டேன்.

இதை உன்னிடம் சொன்னபோது, ?நீ நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும். என்னா..? என்று உரிமையோடு சொல்லிவிட்டு மறைந்து போனாய்.

அந்த உன் மந்திரச்சொல்லால்… நான் படிப்பில் பெரிய ஆளாகி ஊருக்குத் திரும்புகையில்… ஒரு சின்னஞ்சிறு குடிசை முன் கையில் குழந்தையோடு நின்றிருந்த நீ என்னைப் பெருமையோடு பார்த்தாய்.

?கடவுளே… உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?? என்று மனம் அதிர நான் தடுமாறி நிற்கையில், நீயோ என்னைப் பார்த்து நல்லாயிருக்கியா… சீக்கிரம் வீட்டுக்குப்போ. ?என் புள்ள இன்னிக்கு வருது… என் புள்ள வருது?ன்னு காலை யில இருந்து உன் ஆத்தா ரோட்டுக்கும் வீட்டுக்கும் நடந்திட்டிருக்கு என்றாய் ஒரு தெய்வத்தின் குரலில்.

நான் சிறுவனாகிப் போனேன்!

முதலாட்டம் பார்த்துவிட்டு
உன் வீட்டைக் கடக்கையில்,
முதல்முதலில் உன்னை
இரவு உடையில் பார்த்த
அந்த முதல் இரவை
இன்னும் விடியவிடவில்லை நான்!

வெள்ளி
முளைக்கும்போது
நீ குளிக்கிறாயா?
இல்லை…
நீ குளிக்கும்போது
வெள்ளி
முளைக்கிறதா?

நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்
சுற்றிக்கொள்கிறாயே…
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?

கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன…
அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி? என்று.
 
தபூ சங்கர்-

Leave a Reply