நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா & அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியை மடித்து முதல் வேட்டியும் கட்டிக்கொண்டு சந்தித்தோம் | பொங்கி வழிந்த கூச்சத்துடன் ஒரு திருவிழா நாளில்.
குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய்… இனிமே உன்னை டா போட்டுக் கூப்பிடமாட்டேன்!
ஏன்?
மாட்டேன்னா… மாட்டேன்!
அப்போ இனிமே நானும் உன்னை டீ போட்டுக் கூப்பிடக்கூடாதா?
இல்லேல்ல… நீ கூப்பிடலாம். கட்டிக்கப் போறவளை வேற எப்படிக் கூப்பிடறதாம்? & சொல்லிவிட்டு, சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்டாய். உன் வெட்கத்தில், மாந்தோப்பில் காய்த்திருந்த மாங்காய்களெல்லாம் சிவந்து போயின.
இன்னொரு அமாவாசை நாளில் என் அக்கா, தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை. மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, அதோ பார் நிலா! என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாத பொழுதில் ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில்தான்!
பிறிதொரு வருடத்தில் அதே மாந்தோப்பில்தான், என்னை மறந்துவிடுங்கள் என்று அழுதாய். அதோடு முடிந்துபோனது எல்லாம்!
இப்போது உன்னை இந்தா என்று அழைக்க, ஒரு கணவன் இருக்கிறான்.
அம்மா என்று அழைக்க, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆனால்…
ஏண்டா கல்யாணமே வேணாங்கறே? என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மகனாக நான் இல்லை!
என்னை
பைனாகுலர் பார்வை
பார்க்கின்றன
உன் மைனாகுலர் விழிகள்.
அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.
உன்னை
எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ
அங்கெங்கெல்லாம்
நான் அப்படியே நிற்கிறேன்
இன்னும்.
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ.
தபூ சங்கர்-