Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » ஆயிரங்காலத்துப் பயிர்!

ஆயிரங்காலத்துப் பயிர்!

அருகருகே இருக்கும் உங்கள் வயலிலும் எங்கள் வயலிலும் ஒரே நாளில் நடவு!

முதலில் உங்கள் வயலில் படையல் படைத்து, முதல் நாற்றை நட்டாய் நீ. அடுத்து எங்கள் வயல்… உன் தந்தை வந்து யாருப்பா முதல் நாத்து நடப்போறது? என்றார். எங்கள் வீட்டில் உன்னை மாதிரி பெண் யாரும் இல்லை என்பதால், வந்திருக்கிற பொம்பளயாளுக யாரையாவது நடச்சொல்ல வேண்டியதுதான் என்றேன்.
அட, என்ன ஆளுப்பா நீ என்றவர், அம்மாடி… வா… வந்து சாமியக் கும்பிட்டு நடவ ஆரம்பிச்சு வைம்மா என்றார். நீ வந்து வயலில் இறங்கி நான்கு நாற்றுகளை நட்டாய். உன் பாதம் பட்டுவிட்ட எங்கள் வயலிலும், உங்கள் வயலைப் போலவே செழித்து வளர்ந்தது நெற்பயிர். வயல் முழுவதற்கும் நானே நீர் பாய்ச்சினேன் என்றாலும் நீ நட்ட அந்த நான்கு நாற்றுகளுக்கு மட்டும் என் ஆசைகளையும் பாய்ச்சி வளர்த்தேன்.

அறுவடையன்று அறுக்க வந்த ஆட்களிடம், அந்த நான்கு கதிர்களையும் விட்டுவிட்டு அறுக்கச் சொன்னேன். ஏன் ராசா… நட்ட புள்ளையை விட்டே அறுக்கப் போறீங்களோ? என்றது ஓரமாக நின்றிருந்த ஒரு பாட்டி. நான் சிரித்து வைத்தேன். எனக்கு எல்லாந் தெரியும்… தா அங்கதான் நிக்குது அந்தப் புள்ள… கூப்பிட்டு அறுக்கச் சொல்றதுதான… என்றது பாட்டி. சும்மா இரு பாட்டி. நான் இதை விதைக்கு விட்டு… அடுத்த வருஷம் தனியா ஒரு பாத்தி கட்டி நடப்போறேன். அப்புறம் அதையும் விதைக்குவிட்டு, அதுக்கடுத்த வருஷம் இந்த வயல்பூரா நடுவேன் என்றேன்.

அடேங்கப்பா… இம்பூட்டு ஆசையா? அப்புறம் ஏன் ராசா சும்மா இருக்க. கட்டிக்கிறியானு பொட்டுனு கேட்டுற வேண்டியதுதான என்று சிரித்தது பாட்டி. அதுக்கு என்னப் புடிக்குமோ புடிக்காதோ யார் கண்டது?? என்றேன். ?அதும் சரிதான்? என்று போய்விட்டது பாட்டி.

மறுநாள் அந்த நான்கு கதிர்களையும் அறுக்கலாம் என்று வயலுக்கு வந்தபோது, அதைக் காணோம். விடிவதற்குள் யார் அறுத்தது என்று பதைபதைப்போடு நான் தேடுகையில்… மா மரத்தில் ஒய்யாரமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த உன் கையில் இருந்தன அந்தக் கதிர்கள்.

ஏய், எதுக்கு அறுத்த என்றேன் கோபமாக. ம்… வயல்பூரா அறுத்துட்டு, எதுக்கு இத மட்டும் அநாதையா விட்டீங்க… நான் நட்ட துன்னா? என்றாய். அப்படில்லாம் இல்ல என்றேன். எப்படில்லாம் இல்ல? என்னமோ என்னை பிடிக்குமோ பிடிக்காதோனு கேட்டீங்களாமே… புடிக்காமத்தான் உங்க வயல்ல இறங்கி நாத்து நட்டமாக்கும் என்றாய். உங்கப்பா சொல்லித்தான் நீ வந்தியோனு நெனைச்சேன் என்றேன்.
எங்கப்பாகிட்ட சொன்னதே நாங்கதான், தெரிஞ்சுக்குங்க என்று கழுத்தை வெட்டியபடியே இறங்கி ஓடினாய்.

கதிரு என்று ஆனந்தமாகக் கத்தினேன் நான். அது எங்கிட்டயே இருக்கட்டும். அடுத்த வருஷம் ரெண்டு பேரும் சேர்ந்து நட்டுக்கலாம். முதல்ல என்னைக் கல்யாணங் கட்டிக்கிற வேலையைப் பாருங்க என்று ஓடி மறைந்தாய்.

திருவிழா அன்று
கோவிலில் எல்லோருக்கும்
கஞ்சி ஊற்றிக்
கொண்டிருந்தாய்.
அடடா…
எல்லா ஊர்களிலும்
அம்மனுக்குக்
கஞ்சி ஊற்றுவார்கள்.
எங்கள் ஊரில்
அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!

உன் உடல் முழுவதும்
சுவிட்சுகளா என்ன?
எங்கு தொட்டாலும்
விளக்கு எரிகிறதே
உன் முகத்தில்.

இந்த மேஜை மீதிருக்கும்
உலக உருண்டையின்
மாதிரி போல
நீ கூட உந்தன் மாதிரிதானோ.
உண்மையில்
இந்த உலகைப் போல
நீயும் மிகப் பெரியவளோ.

தபூ சங்கர்-

Leave a Reply