Home » கொறிக்க... » கட்டுரைகள் » மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன்… இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே உலகின் கோடிக்கணக்கான இசை, நடனப் பிரியர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். வசீகர இசையில் கிரங்கிப் போன எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இசை சகாப்தம்!

‘கலையை ரசித்து இன்புற மொழி ஒரு பொருட்டல்ல’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் உலக மகா இசைக் கலைஞர்களில் இவருக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.

மைக்கேல் ஜாக்சனின் இசையையும் நடனத்தையும் கண்டு ரசித்து ஆனந்தத் தாண்டவமாடும் லாஸ் ஏஞ்செல்ஸ் இளைஞன்பெறும் அதே உணர்வே, லஸ் கார்னரில் டி.வி.டி.யில் ஜாக்சனைக் கண்டு ரசிக்கும் சென்னை இளைஞனுக்கும் ஏற்படும் என்பதே இவரது இசையின் ஈர்ப்புச் சகதி!

அண்மைக்காலமாக சில நெருக்குதல்களைச் சந்தித்து, அதிலிருந்து மீள்வதற்காக மீண்டும் இசைப் பயணத்தை புத்துணர்வுடன் துவங்க முனைந்த போது, அந்தச் சோகம் நிகழ்ந்தது.

காலனிடம் தனது இசைக் கலைஞனை பறிகொடுத்த துக்கம் தாளாதிருக்கின்றனர், கோடிக்கணக்கான ஜாக்சனின் ரசிகர்கள்!

இவ்வேளையில் மைக்கேல் ஜாக்சனின் 50 ஆண்டு கால வாழ்க்கையை சற்றே நினைவுகூருவோம்…

1958 ஆகஸ்ட் 29 : இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்தார் மைக்கேல் ஜாக்சன்.

1962 ஆகஸ்ட் : தனது சகோதரர்களுடன் இணைந்து இசை பயில்கிறார்.

1969 ஆகஸ்ட் : 11-வது வயதில், சகோதர்களின் இசைக்குழுவின் ‘தி ஜாக்சன் ஃபைவ்’ இசைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. அந்த இசையின் பரவசத்தில் ஆழ்ந்த ரசிகர்களை வெகுவாக கவருகிறார் ஜாக்சன்.

1970 : ஜாக்சன் ஃபைவ் இசைக்குழுவில் இருந்தபடியே தனியாக இசைத் திறனை வெளிப்படுத்துகிறார்.

1979 ஆகஸ்ட் : குயின்ஸி ஜோன்ஸ் தயாரிப்பில் ஜாக்சன் இசையில் “ஆஃப் தி வால்” ஆல்பம் வெளியாகிறது. ஒரு கோடியே 10 லட்சம் கேசட்டுகள் விற்பனையாகி சாதனை நிகழ்த்தப்பட்டது.

1982 டிசம்பர் : “த்ரில்லர்” ஆல்பம் வெளியாகிறது. உலக அளவில் 5 கோடி கேசட்டுகள் விற்பனையாகி சாதனை மேல் சாதனை செய்தது, அந்த ஆல்பம். உலகம் முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக கூடியது.

1984 : பெப்சி விளம்பர படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் மைக்கேல் ஜாக்சனின் முகத்தில் தீக்காயம் ஏற்படுகிறது.

1985 : ஏ.டி.வி. மியூஸிக் நிறுவனத்தை 47.5 மில்லியன் டாலருக்கு வாங்குகிறார். அதே ஆண்டில், “வீ ஆர் தி வோர்ல்ட்” என்ற தலைப்பில் ஆப்பிரிக்காவில் பசிக் கொடுமைக்கு எதிராக புத்தகம் ஒன்றை எழுதுகிறார்.

1987 : “பேட்” ஆல்பம் ரிலீஸ். விற்பனையான மொத்த காப்பிகள் 2 கோடியே 60 லட்சம்!

1988 : “மூன்வாக்” சுயசரிதை புத்தகம் வெளியீடு.

1990 : பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின்பு முதன் முறையாக பொதுமக்களிடையே காட்சியளிக்கிறார். (அதன் தொடர்ச்சியாக பல முறை முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்). 90களில் தான் மைக்கேல் ஜாக்சன் சர்ச்சைகளில் சிக்கித் தவித்த காலம்.

1992 : “டேஞ்சரஸ்” ஆல்பம் ரிலீஸாகிறது. உலக அளவில் இளைஞர்களை ஆட்டம் போடவைத்த அந்த ஆல்பத்தின் 2 கோடியே 20 லட்ச காப்பிகள் விற்பனையாகின.

1993 ஆகஸ்ட் : தனது 13 வயது மகனை பாலியல் பலாத்காரம் செய்ததாக மைக்கேல் ஜாக்சன் மீது ஒருவர் குற்றம்சாட்டுகிறார். எனினும், இந்த சர்ச்சையில் இருந்து ஜாக்சன் வெளிவருகிறார்.

1994 : லிசா மேரி பிரிஸ்லி என்ற பெண்ணை மணம் முடிக்கிறார்.

1995 ஜூன் : “ஹிஸ்டரி” இசை ஆல்பம் ரிலீஸ்.

1996 நவம்பர் – 1999 : டெப்பி ரூவ் என்ற 37 வயது நர்ஸை மணக்கிறார். பிரின்ஸ் மைக்கேல், பாரீஸ் மைக்கேல் காத்தரீன் ஆகிய இரு குழந்தைகள் பிறக்கிறது.

மைக்கேல் ஜாக்சனின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரது இரு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது.

2001 அக்டோபர் : ஆப்பிரிக்க அமெரிக்க கலைஞர்கள் தவறாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

2002 நவம்பர் 19 : தனது 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை பெர்லின் ஓட்டல் பால்கனியில் இருந்து தூக்கி வீசுவது போல் வேடிக்கை காட்டியது சர்ச்சையைக் கிளப்பியது.

நவம்பர் 18 : “நம்பர் ஒன்ஸ்” ஆல்பம் வெளியீடு.

நவம்பர் 19: பண்ணை வீட்டில் குழந்தைகள் பலரையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக, மைக்கேல் ஜாக்சனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நவம்பர் 20 : போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்.

டிசம்பர் 18 : குழந்தைகளை பாலியல் பலாத்காராம் செய்ததாக, மைக்கேல் ஜாக்சன் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இதே ஆண்டில் தான் பல்வேறு பண விவாகரங்களிலும் சிக்கினார், ஜாக்சன்.

2004, ஜனவர் 16 : முதல் முறையாக மீடியா முன்பு தோன்றி, தாம் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்று உணர்வுப்பூர்வமாகக் கூறினார்.

2005 ஜனவரி 31 : மைக்கேல் ஜாக்சன் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்குகிறது.

2005 ஜூன் 13 : மைக்கேல் ஜாக்சன் குற்றமற்றவர் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

2009 மார்ச் 5 : 10 ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனின் தொடர் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக அறிவிக்கிறார்.

2009 மே 20 : லண்டன் இசை நிகழ்ச்சி தாமதமாகி வந்த நிலையில், பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் அறிவிக்கின்றனர்.

2009 ஜூன் 25 : லாஸ் ஏஞ்சல்ஸ்சில் திடீர் மரணமடைந்தார் மைக்கேல் ஜாக்சன்.

75 கோடிக்கும் மேலான ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் என இசையுலகில் நீங்கா இடத்தைப் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் மறைவு அமெரிக்கா மட்டுமின்றி, உலக நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளால் இடையிலே மைக்கேல் ஜாக்சனின் புகழ் சரிந்தாலும், அவர் ஓர் அற்புதக் கலைஞராக பல கோடி மக்களின் மனத்தில் பதிந்துள்ளார் என்பது, அவரது மறைவுச் செய்தியைக் கேட்ட பிறகு சிந்தப்பட்ட ரசிகர்களின் கண்ணீரே சான்று!

உன்னதக் கலைஞர்களுக்கு மறைவு என்பது இல்லை…

இந்தத் தலைமுறை மட்டுமல்ல; அடுத்து வரும் தலைமுறைகளின் கலையுலக இளைஞர்களின் அசைவுகளில் கூட மைக்கேல் ஜாக்சன் என்ற கலைஞனின் தாக்கம் தங்கிவிடுவதை காலத்தால் அழித்துவிட முடியாது!

நன்றி – விகடன்

Leave a Reply