Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள்…

குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள்…

இன்றைய வாழ்க்கை அவசரம் நிறைந்தாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு என்று தனித்தனி கவலைகளுடன் பயணம் செய்யும் காலகட்டம் இது. கணவன்-மனைவி இருவரும் வேலைபார்த்தால் தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளதால் ஒட்டு மொத்த குடும்பமே பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாத நிலை பரவலாக உள்ளது. இதனால் தடம் மாறும் குழந்தைகளும் பலர் உள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும், வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக நல்லவர்களாக வளரவும் உதவும் வழிமுறைகள் குறித்தும், அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழக மனநல ஆய்வாளர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வில் பல்வேறு குடும்ப நிகழ்வுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தினமும் ஒரு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து சாப்பிடும் போது உறவு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது என்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் வெளியான தகவல்கள் வருமாறு:-

என்ன தான் வேலை, அலைச்சல் என்று இருந்தாலும் குடும்பத்தினர் அனைவரும் தினமும் இரவு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இதை செய்ய முடியாத நிலை இருந்தால் வாரம் ஒரு முறை அல்லது ஒரு வாரத்தில் எத்தனை முறை சேர்ந்து சாப்பிட முடியுமோ அத்தனை முறை சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது குழந்தைகள், இளைஞர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுகிறார்களா? அவர்களுக்கு உரிய சத்துக்கள் சாப்பாட்டின் மூலம் கிடைக்கிறதா? என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் பெற்றோரின் கண்காணிப்பில் சாப்பிடும் போது குழந்தைகள் சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது கட்டாயம் ஆகிறது.

சாப்பிடும் போது பெற்றோர்களும் குழந்தைகளும் மனதுவிட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதோடு குடும்பத்தினருக்கு இடையே நெருக்கமும் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிப்பதோடு வாழ்க்கையில் வரும் எந்த சவால்களையும் சந்திக்கும் ஆலோசனைகளும், மனப்பக்குவமும் கிடைத்துவிடும்.

தங்களது குழந்தைகள், வாலிப பருவத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தவறுகள் எதுவும் செய்கிறார்களா? அவர்களின் கல்வி சரியாக உள்ளதா? அவர்களின் நண்பர்கள் நல்லவர்களா? அவர்களின் செயல்கள் சரியான திசையில் செல்கிறதா? என்பது போன்றவற்றை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தங்கள் குழந்தைகளை தவறுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இளைய தலைமுறையினருக்கு, வாலிப பருவத்தில் ஏற்படும் சந்தேகங்கள், உடலியல் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம். இதுபோன்ற நிலையில் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை பெற்றோர்கள் வழங்க முடியும்.

பெற்றோர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் பயன்தரும் இந்த தகவல்கள் அமெரிக்க மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply