Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » கவலையை விரட்டுங்கள்

கவலையை விரட்டுங்கள்

கவலை மகிழ்ச்சிக்கு எதிரி. கவலைக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் வாழ்க்கையே திசைமாறிப் போகும். அதை தவிர்க்க சாதுர்யம் அவசியம்.

கவலை ஏன் வந்தது? அதை தீர்க்க வழி என்ன? என்று புரியாமல் கவலையை வளர்த்து பலர் மனநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். மேலும் பலர் தவறான வழிகாட்டுதல்களால் மது, மாதுக்கு அடிமையாகிறார்கள். இன்னும் சிலர் திருட்டு, வஞ்சகம், குறுக்குவழி என திசைமாறிப் போகிறார்கள்.

இன்றைய இயந்திர வாழ்க்கையில் கவலைகள் இல்லாத மனிதர்களே இல்லை. இதற்கு என்ன காரணம்? கவலைக்கு மருந்து எது? என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்படுகிறது.

கவலைக்கு காரணம்

எதிர்காலத்தின் பொருளாதார பாதுகாப்பு பற்றிய அச்சம், செய்யும் தொழிலில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், நோய் நொடிகளால் வரும் தொல்லை, நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்களால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற பல காரணங்கள் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது.

கவலைக்கு நம்முடைய மனதில் இடம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் நம்மால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியாது. நம்முடைய செயல்திறனும் பாதிக்கப்படும். உழைக்கும் ஆற்றலையும் சிறிது சிறிதாக இழந்து விடுவோம். சிடுசிடுப்பு, முன்கோபம் மற்றும் பல தீய பழக்கங்கள் நம்மை தொற்றிக்கொள்ளும். நாளடைவில் இந்த பழக்கங்கள் மனநோய், தற்கொலை எண்ணம், பிறரை தொந்தரவு செய்தல் உள்ளிட்ட பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும்.

கவலையை தீர்க்கும் வழிகள்

கவலை என்பது தீராத வியாதி இல்லை. கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்சினையும் தீரப்போவதில்லை. சோதனைகளைக் கண்டு அஞ்சுவது கோழைத் தனமாகும். சிந்திக்கத் தொடங்கினாலே கவலைகள் கரையத் தொடங்கிவிடும்.

கவலையை மறக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இனி காணலாம்.

* அமைதியான ஓரிடத்துக்கு சென்று அமருங்கள். கவலைக்கான காரணங்களை பற்றி சிந்தியுங்கள். கவலைக்கு காரணம் கடன்தொல்லையா?, தொழில் பிரச்சினையா?, வேலை கிடைக்காமை போன்ற பொருளாதார பிரச்சினையா? அல்லது குடும்ப உறவு, நட்புறவு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளா? நோய் நொடிகள் போன்ற சிக்கல்களா? என்று பிரித்து அறியுங்கள்.

* கவலை எதை அடிப்படையாக கொண்டது என்று தெரிந்ததும் அதற்கான காரணம்? எதனால், யாரால் ஏற்பட்டது. எப்போதில் இருந்து வரத்தொடங்கியது. இதில் எந்த அளவுக்கு நாம் காரணமாக இருந்திருக் கிறோம்? என்பதை ஆராயுங்கள்.

* வேரும், கிளைகளும் தொல்லை என்று தெரிந்தால் வெட்ட வேண்டியதுதானே பாக்கி. காரணம் தெரிந்ததும் அவற்றை களைய வழிகளை யோசியுங்கள். சில வழிகளை பட்டியலிடுங்கள். சிறந்த வழியை தேர்ந்தெடுங்கள்.

* பின்னர் சிந்தனையை செயலுக்கு கொண்டு வாருங்கள். தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுங்கள்.

* பின்னரும் அதுபோன்ற கவலைகள் தொடராத வண்ணம் வாழும் கலையை கற்றுக்கொள்ளுங்கள்.

கவலைகள் வராமல் தடுக்ககவலைகள் வரும் முன்னரே சமாளிக்க பின்வரும் சிலவற்றையும் பின்பற்றலாம்.

தினமும் கொஞ்ச நேரம் நண்பர்களுடன் மனம் திறந்து பேசுங்கள்.

பெரியோர் துணையை நாடுவதும் சிறந்தது. பெரியோர்கள் குழப்பமான சூழ்நிலையிலும் சிறந்த வழிகாட்டுவார்கள்.

ஓய்வு நேரங்களை பயனுள்ள புத்தகங்கள் படிக்க செலவு செய்வதும் வாழ்க்கையில் பலவகையிலும் கைகொடுக்கும். அவை எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வழிகாட்டும். கவலைகளை விரட்டியடிக்கும்.

உடற்பயிற்சிகள், யோகாசனப் பயிற்சி ஆகியவையும் சிறந்த பலன்களைத் தரும்.

விருப்பமான பாடல்களை கேட்க தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சினிமாவுக்கு சென்று வாருங்கள்.

தனிமை பல விஷயங்களுக்கு தீர்வு கொடுக்கும். இருந்தாலும் தனிமை கவலைக்கும் ஒரு காரணமாக அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அன்றைய வேலைகளை அன்றே முடிப்பது, தேவைகள், விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்வது போன்றவை கவலையை வரவிடாமல் தடுக்கும் சிறந்த வழியாகும்.

உணர்வுகளை தூண்டி கோபம் ஏற்படுத்தக்கூடிய மற்றும் பிரச்சினைக்குரிய எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனடியாக முடிவெடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

***

ஞானி சொன்ன வழி

ஞானி ஒருவர் தனது மகனிடம் “கோபமூட்டும் வகையில் யார் கேள்வி கேட்டாலும் 24 மணி நேரத்துக்கு பிறகு பதில் சொல்” என்று வாக்கு வாங்கிக்கொண்டு இறந்துவிட்டார். அதைப் பின்பற்றிய அவரது மகனுக்கு வந்த பிரச்சினைகள் எல்லாம், அவர் மறுநாள் பதில் சொல்லும் முன்பாகவே தானாக விலகி ஓடின.

ஏனெனில் இங்கு மாற்றங்கள் மட்டுமே நிலையானது. கவலைகள் நிலைப்பதில்லை. அது நிச்சயம் மாற்றம் அடைந்தே தீரும். இதுதான் கவலையை மறக்கும் கலை. இதை நினைவில் வைத்துக்கொண்டால் போதும் கவலைகளை காணாமல் போகும். வாழ்வு சுகமாகும்.

Leave a Reply