Home » கொறிக்க... » தேடல் » முகவரி மாற்றும் சில வரிகள்..

முகவரி மாற்றும் சில வரிகள்..

அன்பு மகனுக்கு !
உன் கடிதம் கண்டதும்
இதரை வாழையில்
இடி விழுந்தது போல்
இன்பமடைந்தோம் !

ஜேர்மன் “பாஸ்போட்”
இனி உனக்கு
என்றைக்கும் வெள்ளி திசைதான்.

எம்மைப்பற்றிக் கவலை கொள்ளாதே
பணம் அனுப்புவதற்காய்
உடலை வருத்தாதே
உன் கல்விதான் – எம்
உயிர் மூச்சு.

நன்றாக ஓய்வெடு
உடம்பைக் கனித்துக்கொள்
“சுவர் இருந்தால்தான்
சித்திரம் வரையலாம்”

அது போக
கிணத்தடித் தட்டியும் இத்துப்போகுது
அக்காமார் குளிக்க – முழுக
அக்கம் பக்கத்தில்…..
ஏனிந்தப் பிரச்சனை !
குளியலறைதான் – என்
யோசனை.

மூத்தவளுக்கும்
கலியாணம் பேசி வந்தது
உன்னை நம்பித்தான்
ஐந்து லட்சத்துக்கு
உடன் பட்டேன்.

ஒன்றுக்கும் யோசிக்காதே !
நன்றாய் படி
உடம்பைக் கவனி.

இங்கு
எல்லோருடைய வீட்டிலும்
ரீவி-டெக் சகஜம்
எங்களுடைய வீட்டில் இல்லை
எங்களுக்கும் கவலையில்லை – ஆனால்
உனக்குத்தான் கௌரவம் இல்லை.

நன்றாகப்படி ராசா
உடம்பைக் கவனித்துக்கொள் !

முன் வீட்டு
முத்தையரின் மகன்
படித்துக் கொண்டே – இரவில்
வேலை செய்து
புது வீடு கட்டியிருக்கிறான்.

நன்றாகப்படி ராசா
உடலை வருத்தாதே !

உன் வசதிக்காய்
ஜேர்மனியில் இருந்து
“உண்டியல்” மூலம்
பணம் அனுப்புபவரின்
முகவரியையும் அனுப்புகிறேன்.

ஓய்வெடு…உடம்பைக்கவனி
நன்றாகப் படி !

(பிற்குறிப்பு- யேர்மன் மார்க் நல்ல விலை போகிறது)

———————————————–

இதரைவாழையில் இடி விழுந்தால்
அந்த வாழையின் தண்டு தங்கமாகும்
என்பது மூதாதயரின் நம்பிக்கை.
இப்பொளுதும் ஈழத்திலிருக்கும்
வயோதிபர்கள் அப்படித்தான் நம்புகிறார்கள்.

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply