Home » கொறிக்க... » தேடல் » இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

பிறந்த மண்ணின்
துயரத்தை தூக்கியெறிந்து
சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும்
வித்தியாசம் தெரியாத
“ஐரோப்பிய அவசரமாய்”
யார் இவன்…?

ஈழத்தில்
எம்மவர் உடல் கருக – இங்கு
இதயத்தைக் கருக்கிவிட்டு
இன்பத்தைத் தேடியலையும்
காமுகனாய் யார் இவன்….?

நொங்கு வண்டில் சுழ்ந்து வர
குரும்பட்டித்தேரிழுத்த
சுந்தர பூமியில்
“மனித ரத்தமும் சதையும்”
சிதறிக்கிடந்தால்த்தான்- எனக்கு
இங்கு
அகதி அந்தஸ்த்துத் தொடரும்
என்கிறானே….!
யார் இவன்……?
சோகங்களையே சுவாசங்களாக்கி – எமை
சுமந்த மண்ணில்
சமாதானக்காற்றின் சாயல் தெரிய
முகம் கறுத்து விறுவிறுக்க
சமாதானம் கர்ப்பத்திலேயே கரைய
கடவுளை வேண்டுகிறானே….?
யார் இவன்……?

அம்மாவும் அப்பாவும் கூடவே அக்காவும்
கொடுங்கோல் ஆட்சியில்
குடும்பத்தோடு முடமாக – இங்கு
குழுகுழுப்பான குட்டி தேடி
நாயாய் அலைகிறானே…!
யார் இவன்…..?

உணவின்றி உயிரிளைத்து
மார்பு வற்றிய அக்கா – குழந்தை
அழுதாலும் சட்டை திறப்பதில்லையாம்
காரணம் முலையில் பாலுமில்லை
அடிக்கடி திறந்து சட்டை கிழிந்தால்
மாற்ற வழியுமில்லை – ஆனால்
அவள் தம்பி – இங்கு
இந்திய நடிகை வந்ததும்
தடவித் தடவி
தங்கக் கொலுசு கட்டி விடுகிறானே…..!
யார் இவன்….?
இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply