Home » கொறிக்க... » தேடல் » தமிழ் அன்னை வேண்டும்

தமிழ் அன்னை வேண்டும்

அன்புக்குரிய அண்ணாவுக்கு….!

பாசறையில் யாவரும் நலமே…

மன்னார்க் கடலில் – நான்
மாண்டுவிட்டதாக
ஒப்பாரி வைத்தீர்களாமே…..!

ஈழத்தாயின் மானம் காக்கப்
புறப்பட்ட அன்றே – நானும்
மரணத்தை வென்றவர்கள்
பட்டியலில்…..

உங்களுக்குத் தங்கை வேண்டும்
எனக்கு அண்ணன் வேண்டும் – ஆனால்
எங்களுக்கு…..

அன்னை வேண்டும்
“தமிழ் அன்னை வேண்டும்”

உங்களுக்குத் தெரியாமல்
பல களங்களில் – என்
துப்பாக்கியும் சிவந்திருக்கிறது

நாளை நான்
கருவேங்கையாகி
எதிரி பாசறை
எரித்து எம் தாயகக் காற்றோடு
கலந்து போகலாம்

கலங்காதே….!

என் முடிவு
விடியலுக்கான உந்துதல்…

புத்த பகவானின் சிலையருகே
தமிழ்த்தாயின் குழந்தைகளை
கொதிதாரில்
நீந்தவிட்டார்களே…..!

அன்று அழுதாயா….?

அனுராதபுரத்தில்
அரச மரத்தருகில் – தமிழர்
தலையறுத்தார்களே…..!

அன்று கலங்கினாயா….?

மட்டக்களப்பு வாவியருகே
சாமத்தியச் சடங்கன்றே
தமிழச்சியின் கற்பெடுத்த
சிங்க(ள)த்திற்கு
சிம்மாசனம் போட்டார்களே….!

அன்று துடித்தாயா…?

பிரசவத்துக்காய்ப்போன
தமிழ்த்தாயின் மேல்
பிரம்படியில்
அன்னிய அரக்கர்கள்
ஆயுத வண்டியேற்றி
இந்தியில்
சுகப்பிரசவம் என்றார்களே….!

அன்று கண்ணீர் வடித்தாயா….?

மணமேடையில்
கணவனின் குருதியெடுத்துத்
தமிழ்ப்பெண்ணின்
குங்குமம் கரைத்தார்களே…!

அன்று….எண்ணினாயா…
எம் அன்னைமண்
காக்கவேண்டுமென்று…. ?

கிளாலிக்கடலில்
மீன்கள் பெரு(க்)க தமிழர்
உடல்களைச் சிதைக்கிறார்களே…..!
அதைப்பற்றி ஏதாவது சிந்தித்தாயா…?

இருக்காது… இருக்காது…

அண்ணா!
எனியேனும்
எனையெண்ணி கலங்காதே!

“எம் சொந்தங்களை விட்டு
விலகுகிறோம் – எம்
சொந்த தேசம் எமை விட்டு
விலகாமலிருக்க”

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply