Home » கொறிக்க... » கட்டுரைகள் » உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்…

உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்…

ஒருசின்ன கற்பனை.

நீங்கள் ஒரு நிறுவனத்தைத் துவக்குகிறீர்கள். ஆறாயிரம் ரூபாய்தான் முதலீடு. ஒரு வருடத்தில் நிறுவனம் கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. அப்போது ஊரில் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர் உங்களை அழைக்கிறார். `உங்கள் நிறுவனம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒன்றரைக் கோடி ரூபாய் தருகிறேன், எனக்கு கொடுத்துவிடுங்கள்’ என்கிறார். என்ன செய்வீர்கள்?

இதே நிலைதான் சபீர் பாட்டியாவுக்கும், ஆனால் கொஞ்சம் பிரம்மாண்டமாய். அவரை அழைத்து விலை பேசியவர், உலகின் முதல் கோடீஸ்வரர் பில்கேட்ஸ். சொன்ன தொகை எண்ணூறு கோடி ரூபாய். அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கம்பெனியை கொடுத்திருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை. சபீர் பாட்டியா அப்படிச் செய்யவில்லை. பில்கேட்ஸிடம் பேரம் பேசினார். சில மாதங்கள் நடந்த பேரத்துக்குப்பிறகு நிறுவனம் கைமாறியது. தொகை எவ்வளவு தெரியுமா? இரண்டாயிரம் கோடி ரூபாய்.

பேரம் பேசியதில் ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் லாபம். அந்தப் பணத்தை சம்பாதித்தபோது சபீரின் வயது என்ன தெரியுமா, இருபத்தேழு.
அது என்ன நிறுவனம்? அதில் அப்படி என்ன விசேஷம் என்று உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் வந்திருக்கும். இன்று உலகமெங்கும் புகழ் பெற்றிருக்கும் இமெயில் சேவையான ஹாட்மெயில்தான் சபீரின் நிறுவனம். 1996- ல் இண்டர்நெட் மெல்ல பரவிக் கொண்டிருந்த காலம். அப்போது விஸ்தாரமான இமெயில் கிடையாது. சபீர் பாட்டியாதான் பலரும் உபயோகிக்கும் வகையிலான ஹாட் மெயிலை உருவாக்கினார். அதைத் துவக்கிய சிறிது காலத்திலேயே பலர் அதில் உறுப்பினர்களாகிவிட, பில்கேட்ஸின் கண்களை உறுத்திவிட்டது. அது வளரப்போகும் வளர்ச்சியை அவரால் கணிக்க முடிந்ததால் சபீரிடம் பேரம் பேச வந்துவிட்டார்.

 “எப்படியெல்லாமோ பேசி என்னிடம் இருந்து குறைந்த விலைக்கு கம்பெனியை வாங்க முயன்றார்கள். ஆனால் அவர்களின் ஆட்டங்களுக்கு நான் அனுசரித்துவிடவில்லை. எனக்கு என்னுடைய மதிப்பு என்ன என்று தெரியும். அதனால் விடாப்பிடியாக நின்று சாதித்துவிட்டேன்” என்கிறார் சபீர் பாட்டியா.

இதுதான் சபீரின் வெற்றிக்கு அடிப்படை. அவருடைய மதிப்பு அவருக்குத் தெரியும். `உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்’ என்ற எம்.ஜி.ஆர். படப் பாட்டு சமாசாரம்தான். ஆனால் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக முக்கியமான ஒன்று.

சபீர் பிறந்தது பெங்களூரில். அப்பா ராணுவ அதிகாரி. அம்மா வங்கி அதிகாரி. சிறுவயதிலேயே படிப்பில் படுகெட்டி. கல்லூரி முடித்ததும் அமெரிக்கா சென்று கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கற்று… முதல் வேலையே உலகப் பிரசித்தி பெற்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில். வாழ்க் கையில் நல்லவிதமாக செட்டிலாகிவிட்டார் என்று பெற்றோர் நினைத்திருந்த வேளையில், வேலையை விட்டார் சபீர். இண்டர்நெட் துறையில் சொந்தமாய் சாதிக்க விரும்பினார். காரணம் அவர், அவரை அறிந்து வைத்திருந்தது. தன்னால் சாதிக்க முடியும் என்று புரிந்து வைத்திருந்தது. ஆப்பிளிலிருந்து வெளிவந்தபிறகு தான் ஹாட் மெயில், கேட்ஸ், இரண்டாயிரம் கோடி எல்லாம்.

“உங்களை நீங்கள் சரியாகத் தெரிந்து வைத்திருந்தால் தெளிவான முடிவுகளை எடுக்கலாம். வாழ்க்கை யில் ஜெயிக்க” என்கிறது சபீரின் வாழ்க்கை.

நன்றி: குமுதம்-

Leave a Reply