ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர்.
பேரரசனுக்குப் படை பலம் பெரிது. வலிமை மிக்கது. குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமிக்கவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள். அதனாலேயே மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள்.
குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான்.
‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் நிச்சயமாக ஜெயிக்க வேண்டும். ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கடவுள் நம்முடன் இருக்கிறாரா என்பதை அறிய இந்தக் காசை சுண்டிவிடுகிறேன். தலை விழுந்தால் கடவுள் நம் பக்கம். பூ விழுந்தால் போரில் தோற்றுவிடுவோம்’’ என்று காசைச் சுண்டினான்.
தலை விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகம். கடவுளே நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம் அவர்கள் மனதில். வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டார்கள். வென்றுவிட்டார்கள்.
தளபதி வந்தார்.
‘‘மன்னா கடவுள் நம்முடன் இருந்ததால் நாம் ஜெயித்து விட்டோம்’’ என்று உற்சாகமாய் சொன்னார்.
‘‘இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையாலும், மன பலத்தாலும் ஜெயித்துவிட்டோம்’’ என்று அவன் சுண்டிவிட்ட காசை எடுத்துக் காட்டினான். அதில் இருபுறமும் தலைதான் இருந்தது.
நீதி : மனபலம் இருந்தால் எதையும் ஜெயிக்க முடியும்.