Home » குட்டிக்கதைகள் » ஐ லவ் யூ மம்மி!

ஐ லவ் யூ மம்மி!

வீட்டுக்குள் நுழைந்த தாய்க்குக் கோபம் தலைக்கேறியது.

வீட்டு வரவேற்பறை முழுக்க வண்ண வண்ண காகிதங்கள், ரிப்பன்கள் என துண்டு துண்டுகளாய் சிதறிக் கிடந்தன. எல்லாம் தன் ஆறு வயது மகனுடைய வேலை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குள் மகனே வந்துவிட்டான். கையில் அழகான பெட்டி.

‘‘அம்மா, இது உங்களுக்காக நான் செஞ்சது’’ என்று ஓர் அழகான பெட்டியைக் காட்டினான்.

‘‘என்னடா இது?’’ கோபமாய்க் கேட்டாள் அம்மா.

‘‘என்னோட பரிசு. பிரிச்சுப் பாருங்க…’’

தாய் பிரித்தாள். உள்ளே ஒன்றுமே இல்லை. தாய்க்கு இன்னும் கோபம். மகன்மேல் பாய்ந்தாள்.

‘‘என்ன நினைச்சிட்டு இருக்க. பத்திரமா வச்சிருந்த அத்தனை கலர் பேப்பரையும் வெட்டி வெட்டிப் போட்டிருக்க. தரையெல்லாம் குப்பை. பெட்டிக்குள்ளேயும் ஒண்ணுமில்ல. வெறும் பெட்டியையா பரிசா கொடுப்பாங்க’’ பொரிந்து தள்ளினாள்.

மகன் முகம் வாடி விட்டது.

‘‘அம்மா, அந்தப் பெட்டிக்குள் என் அன்பு அத்தனையும் வச்சிருக்கேன்மா. உன்னால கண்டுபிடிக்க முடியலையாமா?’’ என்று சோகமாய்க் கேட்டான்.

தாய் மீண்டும் பெட்டிக்குள் பார்த்தாள். உள்ளே பெட்டியின் அடிபாகத்தில் ‘ஐ லவ் யூ மம்மி’ என்று அழகாய் எழுதியிருந்தான் மகன்.

தாய்க்கு மகன் அன்பும் புரிந்தது. தான் அவசரப்பட்டதும் புரிந்தது.

Leave a Reply