Home » கொறிக்க... » தேடல் » கண்ணே எனை மறந்து விடியலுக்கு வித்தாக

கண்ணே எனை மறந்து விடியலுக்கு வித்தாக

தென்னங்குருத்து மரணிக்க
வீதியெங்கும்
தோரணக்குழந்தைகள்….

தேசத்தின் சோகப் பிரகடனத்தை
வானுக்கு ஏற்றுமதி செய்த
ஒலிபெருக்கிகள்……

விடியலின் வித்துக்களுக்காய்
தெருவோரங்களில்
புதிதாய் முளைத்து
கண்ணீர் சிந்திய
திடீர் வாழைகள்…..

புல்லின் இதழ் நுனியில்
கூடு கட்டிய
குருதித்துளிகள்…..

கண்ணீர் ரத்தம் சோகம்
இவற்றினுள்
புதைந்து கிடந்த
வன்னி மண்…..

மரணித்த வீரர்களுடன்
இரத்தத்தில் குளித்த
நானும் – எனது
நண்பர்களும்…..

கண்ணே….!
நினைவு இருக்கிறதா….?
அன்றுதான் உனக்கு நானும்
எனக்கு நீயும்
அறிமுகமானோம்

அதே கிழமை
அன்னிய இராணுவ மோதலில்
சிதைந்த காலின்
சதைகளைப் பொத்தியபடியே
தவண்டு….தவண்டு…..வந்து
உன் வீட்டுத் திண்ணையில்
மயங்கிக் கிடந்தேனே….
நினைவு இருக்கிறதா….?

அன்னிய ராணுவம்
எறுப்பாய் சுழ
வாழைக்குலையுடன்
என்னையும் குளியினுள் தள்ளி
வைக்கோல் போட்டுப்
புகையடிப்பதாய் நடித்தாயே….!
நினைவு இருக்கிறதா…..?
அதே நான்….நான்தான்….

இன்றும் ஊனத்துடன்
ஐரோப்பிய நாடொன்றின்
அரசுப்பிச்சையில்
அழுந்திக் கிடக்கிறேன்

திகைக்காதே…..!
எனைத் தேடுவதை
இன்றுடன் நிறுத்திவிடு….!

வைத்தியம் செய்ய
அயல் நாடு
வந்த நான் – என்
உறவுகளால்
மூளைச்சலவை செய்யப்பட்டு
ஐரோப்பாவிற்கு
நாடு கடத்தப்பட்டதை
நீ அறியாய்…..

நீ என்மீது கொண்ட
காதலும் நேசமும்
உண்மையெனில்
கண்ணே எனை மறந்து
விடியலுக்கு வித்தாகு….

-அன்புடன் நண்பன்-

(விரைவில் எனைப்பற்றிய
செய்திகள்-உன்
செவிப்பறைகளை சேதமாக்கலாம்
கலங்காதே)

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply