அன்புடன்
ந…நண்பனுக்கு…!
இன்னும்
உறுதி குலையாமல்
தமிழருக்காய்ப் பணிசெய்ய
தவமிருக்கிறாயாமே…..?
பாராட்டுக்கள்…..
இலட்சியம் எட்டும் வரை
கொண்ட கொள்கை
மாறமாட்டேன் என
அடம்பிடிக்கிறாயாமே….?
வாழ்த்துக்கள்…..
“தமிழரின் விடுதலைக்காய்
தலையையும் கொடுப்பேன்”
என
சத்தியம் செய்த – நீ
இன்று
தமிழர் தலையெடுக்கும்
தலைமையின் கீழ்….
வேண்டாம்….வேண்டாம்…..
சீ…இதுவா உன் இலட்சியம்…?
நீ நல்லவன்
நானறிவேன்
உன்
முடியும் உடலும்
வற்ற….வற்ற….
உன் தோழர்களின்
சட்டைப்பைகள்
ஊற்றெடுப்பதை – நீ
அறிவாயா….?
நாம்
சின்ன வயதில்
சிலுப்பர்க் கட்டையில்
சோக்குக் கட்டியால்
சுரியன் கீற
கதறி வந்த புகையிரதம் கண்டு
காஞ்சுரம் பற்றையினுள்
குருதி குழித்தோமே…!
மறந்து விட்டாயா….?
தமிழரின் தாயகம்
மீட்பதாய்
சுரியனுடன் வந்தவர்களுக்குக்
கலக்கமின்றி
கை கிழித்து
குருதித்திலகமிட்டோமே….!
மறந்து விட்டாயா?
வயற்காட்டில்
நா வரண்ட அப்பாவுக்காய்
அன்பாய் எடுத்துச்சென்ற
சுடுநீர்ப்போத்தல்
“பட்டாம்பூச்சி
பிடிக்கப்போய்”
பல நூறாய் சிதறியதை…..
பூமணியாச்சி கடையில்
புது முட்டை வாங்கி
பத்திரமாய் பையினுள் போட்டு
பாருக்குக் கீழால்
சைக்கிள் ஓடி
செல்லையாக் கிழவனின்
நாயில் மோதியதை….
மறந்து விட்டாயா…?
இல்லை….இல்லை….
மறந்திருக்கமாட்டாய்
நண்பா …!
மன்னிக்கவும் – உனை
நண்பன் என்று கூற
“நா” கூசுகிறது
காக்கைவன்னியரின்
கூட்டத்தில்
கண்மூடியிருந்தது போதும்….
அன்று – நீ
கொண்ட இலட்சியம்
உண்மையெனில்
மாறிவிடு…
இன்றே மாறிவிடு…
“பண்டார வன்னியன்
படையணியில் ஓர் வீரனாக”
ரமேஷ் வவுனியன்.