உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் பிறவி எண்; பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் அடிப்படையில் விதி எண்; உங்கள் பெயரின் அடிப்படையில் பெயர் எண் ஆகியவையே அவை ஆகும்.
நீங்கள் 27_12_1969_ல் பிறந்தவர் எனக் கொள்வோம்.
பிறந்த தேதி 27. ஆகவே 2+7=9.
பிறவி எண்=2+7+1+2+1+9+6+9=37=10=1.
ஆக, விதி எண் = 1.
இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவருடைய பிறவி எண்ணையும், விதி எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறந்த தேதி தெரியாதவர்கள், அவரவர் பெயருக்கு எந்த எண் வரும் என்ற கணக்கைத் தெரிந்து கொண்டால் போதும்.
உதாரணமாக ஒருவரின் பெயர் என்.கமலக்கண்ணன் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெயரில் உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் தனித்தனியாக எண் உண்டு. எல்லா எண்களையும் கூட்டி, கூட்டிய எண்ணை ஒற்றை இலக்கமாக்கி, அந்த நபர் அந்த எண்ணுக்குரியவர் எனக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக N.Kamalakkannan
5+2+1+4+1+3+1+2+2+1+5+5+1+5 = 38 = 11 =2
மேலே குறிப்பிட்டுள்ள என். கமலக்கண்ணன் என்பவருக்குக் கூட்டு எண் 38_ஆகவும் ஒற்றை எண் 2_ஆகவும் வருவதைக் காணலாம். எனவே, இவர் எண் 2.
கீழே ஆங்கில எழுத்துக்கள் 26_க்கும் உரிய எண்கள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கொண்டு நீங்கள் உங்கள் பெயர் எண்ணைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
A I J Q Y _ 1
B K R _2
C G L S_ 3
D M T 4
E H N X _5
UVW _6
OZ _7
FP _8
எண் _ 1 அதிர்ஷ்டக்காரர்கள்
எண் கணிதப்படி, எண்_1 அதிர்ஷ்டமாகும். இவர்கள் தங்கள் விதி எண்ணும், பெயர் எண்ணும் இதே 1 எண்ணாக வரப் பெற்றால், அதிர்ஷ்டசாலிகளாவார்கள். இவர்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவார்கள். ஞாயிற்றுக்கிழமையில் வியாழனது ஓரையில் அவர்களுக்கு எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் உண்டாகும். சாதாரணமாக 10 மணி, 1 மணி என்கிற நேரத்தை ஒட்டியுள்ள காலப்பகுதி அதிர்ஷ்ட வாய்ப்புள்ள காலப் பகுதியாகும்.
எண் _ 2 வசிய சக்தி கொண்டவர்கள்
எண் கணிதப்படி, எண்_2 உன்னதமான அதிர்ஷ்ட எண்களில் ஒன்று எனச் சொல்லப்படவில்லை. ஆனாலும், இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வசிய சக்தி மிக்கவர்கள். இதர எண்களின் சேர்க்கையின் காரணமாக விசேடமான முன்னேற்றத்தை அடையக்கூடும். பொதுவாக, இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள், தங்கள் எண்களாகிய 2,11,20,29 ஆகிய தேதிகளில் ஓரளவு அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறக் கூடியவர்களாவார்கள்.
எண் _ 3 குபேரனாகும் அதிர்ஷ்டம்!
எண் சாத்திரப்படி எண் _3ஆனது சிறப்பான அதிர்ஷ்ட எண்களில் ஒன்றாகும். இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வியாழனின் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவார்கள். ஜோதிட சாத்திரத்தில் வியாழன் எனப்படுகிற குருவானவர் தனகாரகன் ஆவார். அதாவது, செல்வத்தின் சுபீட்சத்தைப் பிரதிபலிக்கின்றவர் ஆவார். ஆற்றல்மிக்க இந்த எண், தன்னைச் சார்ந்தவரை செல்வக் குபேரனாகவும் ஆக்கக் கூடியது.
எண் _ 4 குறுக்கு வழியில் செழிப்பு!
எண் 4_க்கு புரட்சிகரமான திருப்பங்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு அதிபதி ராகு ஆவார். இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் வியாபரத்தின் மூலம் அபிவிருத்தி அடையக் கூடியவர்கள். அரசியல், இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் பற்றி அறிந்து வைத்துக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. மிகச்சிறந்த மேதைகள் இந்த எண்ணைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், பிடிவாதமும், வைராக்கியமும் உள்ள போக்கை மாற்றிக் கொண்டால் இவர்கள் சிறப்புடையவர்கள் ஆவார்கள்.
எண் _ 5 காந்த சக்தி மிக்கவர்கள்
ஒன்பது எண்களிலுமே இந்த 5 எண்ணுக்கு மாத்திரம் எல்லாவற்றையும் கவர்ச்சி செய்கின்ற ஒரு காந்த சக்தி அதிகமாக உண்டு என்பது எண் சாத்திரக் கணிப்பு. சக்தி படைத்த இந்த எண்ணுக்கு நாயகன் புதன் ஆவார். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கும், தொழில் துறைகளில் செல்வம் குவிப்பதற்கும், எடுத்த கருமத்தில் வெற்றியடைவதற்கும் இந்த எண்ணால் பயன் அடைய முடியும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் தொழில் புரிவார்கள். ஆனால், அந்த வேகத்தில் விவேகத்தையும் கலந்து கொண்டார்களானால் மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும்.
எண் _ 6 அழகானவர்கள்
எண் _ 6க்கு எல்லோரையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் சக்தியுண்டு என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்த எண்ணின் நாயகன் சுக்கிரன் அல்லவா? இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் நிறையப் பொருள் திரட்டுவதற்குரிய வாய்ப்பைப் பெறக்கூடியவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் அதிர்ஷ்ட நாட்டம் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. மற்றையோரிடமிருந்து தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் தகுதி இவர்களிடம் அமைந்திருக்கும். அழகு அம்சத்தில் உன்னதமானவர்கள் ஆதலால், மற்றையோரைக் கவர்ந்திழுப்பார்கள்.
எண் _ 7 எழுத்தாற்றலால் அதிர்ஷ்டம்
பொதுவாக இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பான தன்னம்பிக்கையும், கவர்ச்சியான முகத்தோற்றமும், சிந்தனை ஆற்றலும், சமுதாயப் பணியாற்றும் ஆர்வமும் இருப்பது இயற்கை. இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது ஓர் அளவோடு உண்டாகும்.
இசை ஞானம் எழுத்தாற்றல் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். வெளிநாட்டுப் பயணங்களாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படக்கூடும். போட்டிவரும்போது எதிர்வாதம் செய்து வெற்றி காண்பதில் தகுதி பெற்றிருப்பார்கள். மனோபலம் அதிகம் உள்ள இவர்களுக்கு, மனந்தான் வெற்றிக்கு இருப்பிடம். எனவே, மனத்தைத் திடமாக வைத்துக் கொள்வது அவசியம்.
எண் _ 8 அஞ்சத் தகுந்ததல்ல
ஒருவருக்குப் பிறவி எண்ணோ,விதி எண்ணோ 8_ஆக அமைந்து விடுமானால் அவர் தமது பெயர் எண்ணை 5_ஆக அமைத்துக் கொள்வது சாலவும் சிறந்தது. இந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. இந்த எண்ணின் நாயகனான சனி பகவான் மனம் வைத்தால், மங்களங்கள் அனைத்தையும் பொங்க வைப்பார். சகல வசதியையும் அளிப்பார். எண் 8_ஐச் சார்ந்தவர்களில் பலர் வாழ்க்கையில் உன்னதமான நிலையில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அதிர்ஷ்டசாலிகள் இந்த எண்ணைச் சார்ந்தவர்களில் பலர் உண்டு. அந்த அதிர்ஷ்டசாலிகள் நிரந்தர அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதற்கு இடமில்லாமல் போகிறது. இந்த எண்ணைச் சார்ந்தவர்கள் தங்கள் கைப்பொருளை மற்றையோருக்கு வழங்கப் பின்வாங்க மாட்டார்கள். மற்றையோரிடம் கருணை செலுத்தும் மனப்பான்மை இந்த எண்ணுடையோரின் பிறவிக் குணமாக இருக்கும். பக்குவம் நிறையப் பெற்றவருக்குப் பணம் ஒரு பொருட்டாக இராது.
எண் _ 9 போராட்டம் மூலம் புகழ்
எண் 9 ஆனது அதிர்ஷ்டம் உடைய எண்களின் ஒன்றாகும். புரட்சிகரமான சாதனைகளைச் செய்தோ, பூர்வ அந்தஸ்தின் சிறப்பாலோ, அபரிமிதமான ஆற்றலாலோ வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பெறக் கூடியவர்கள் இவர்கள். அங்காரகனை நாயகனாகக் கொண்ட இந்த எண், விசேடமான சக்தி வாய்ந்தது. போராட்டம் என்பது இந்த எண்ணுக்குரிய தனிச்சிறப்பு. போராட்டம் மூலம் புகழேணியில் ஏறுகிறவர்கள் இந்த எண்ணில் உண்டு.