Home » காதல் » உயிர்ச் சொந்தமானவளே…

உயிர்ச் சொந்தமானவளே…

* தூரத்துச் சொந்தமென்று தான்
சொன்னார்கள்…
நீயோ–
ஒற்றைப் பார்வையிலேயே
என்
உயிர்ச் சொந்தமானாய்!

* பண்டிகை கொண்டாட
வந்த இடத்தில்…
உன்
பட்டுத் தாவணிக்கு
பதில் துணி இருக்கவில்லை…
நீ
போட்டுக் கழற்றிய
என்னுடைய சட்டையை
இதுவரையிலும் துவைக்கவில்லை!

* நாலு சுவர்
எழுப்பியதும்
நடுப்பகுதி வீடானது…
நீ
வந்து போனாய்
கோவிலானது!

* ரத்தமில்லாமல்
நான்
உயிர் வாழ்ந்து விட முடியும்…
உன்
சப்தமில்லாமல்
வாழ முடியுமா?

* கூப்பிடு தூரத்தில்
குடியிருப்பவள் நீயென்றால்…
சொந்த ஊர் எதுவென்ற
கேள்விக்கு
சொர்க்கமென்று
சொல்லியிருப்பேன்!

* முட்கள் நிறைந்தது தான்
என்னுடைய பாதை
ஒத்துக் கொள்கிறேன்…
கூடவே நீ
வருவதென்றால்
ஊசி முள் அத்தனையும்
ஒரே சீராகக் கட்டி
உனக்கு
அக்குபங்சர் செருப்பாக
ஆக்கித்தர மாட்டேனா?

* கனகாம்பரம்
பறித்த போது
காம்பு உடைந்ததற்கே
“அச்சச்சோ…’ என்றவள் நீ…
என்
இதயம் உடைந்தது மட்டும்
எதேச்சை என்கிறாய்!

* என் தவிப்பு
உனக்கு
சிரிப்பாகக் கூட இருக்கலாம்…
இருக்கட்டும்
நீ
சிரிப்பதற்காகவேனும்
நான் தவித்துக்
கொண்டிருக்க வேண்டும்!

-க.ச.கலா, நெல்லை-

Leave a Reply