Home » கொறிக்க... » கட்டுரைகள் » மானுடத்தின் மகத்தான இரண்டு போராட்டங்கள் ! – (விஷ்வா) விஸ்வநாத்

மானுடத்தின் மகத்தான இரண்டு போராட்டங்கள் ! – (விஷ்வா) விஸ்வநாத்

ltteபோராட்டங்கள், யுத்தங்கள், எதிர்ப்புகள் என புத்தகங்களில் படித்திருக்கலாம். சினிமாக்களில் பார்த்திருக்கலாம், தாத்தா பாட்டி கதை சொல்லக் கேட்டிருக்கலாம்.

அந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் பதவிக்காவோ, மண்ணுக்காகவோ, பெண்ணுக்காகவோதான் இருந்து வந்திருக்கின்றன என்பது வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியுள்ள உண்மைகள்.

சிங்களவர்களுக்கு ஈடான சமஉரிமை வழங்கப்படவில்லை, ஒட்டுமொத்த இனமும் கொஞ்சம் சொஞ்சமாக அழிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து வெகுண்டெழுந்த போராட்டம்தான் ஈழத்தமிழர் போராட்டம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறப்போராட்டம், ஆயுதப்போராட்டம், ராஜாங்க ரீதியான போராட்டம் என பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் ஈழத்து சகோதரர்கள்.

அவர்களின் நோக்கம் தங்களுக்கு மட்டும் பலன் தரக்கூடிய நோக்கமல்ல. தங்கள் சந்ததிக்கும், வருங்கால சந்ததி என அந்த மண்ணில் வாழப்போகும் ஒவ்வொரு தமிழ்கூறுவோருக்கும் பலன் கோரக்கூடிய கோரிக்கைப் போராட்டம்.

எத்தனை தடைக்கற்கள், எத்தனை தவறான பிரச்சாரங்கள், எத்தனை உயிரிழப்புக்கள், எத்தனை உடைமை இழப்புக்கள் என சொல்லொணாத் துயரங்களை நெஞ்சிலும், உறவுகளை தோள்களிலும், கிடைத்த உடைமைகளைக் கைகளிலும் சுமந்து கொண்டு உலக நாடுகளில் சுற்றித் திரிந்து கொண்டுள்ளனர் ஈழத்து மக்கள்.

அவர்களின் போராட்டம் மகத்தானது. அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல அவர்கள் மனிதர்கள் என்பதற்காகவே அவர்களின் போராட்டத்திற்கு ஒவ்வொரு மனிதனும் ஆதரவளிக்க வேண்டும். இது இந்த யுகத்தின் மகத்தானதொரு முதல் போராட்டம்.

கிறிஸ்தவ மிசனரியின் சதி, அமெரிக்க சதி, வெளிநாடுகளில் இருந்து கட்டுக்கட்டாய் பணம் வருகிறது, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கெதிரானது, சில மீனவர்களைக் கொண்டு நடத்தப்படக்கூடிய குறுகிய நோக்கம் கொண்ட போராட்டம், இந்திய அரசுக்கெதிரான போராட்டம் என பலவித குற்றச்சாட்டுக்களை ஒட்டுமொத்த இந்திய அரசும், ஆளும் காங்கிரஸ் கட்சியும் தனது அனைத்து வலிமையோடும் அள்ளிவீசியும்கூட “அணு”அளவும் தளர்ச்சியடையாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இன்னொரு போராட்டம் கூடங்குளம் போராட்டம்.

demo1கூடங்குளத்தில் மொத்தம் பத்து அணுசக்தி மின்உற்பத்தி உலைகள் தொடங்கப்படவுள்ளன. ஒவ்வொன்றும் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உருவாக்கக்கூடியது. தற்போது இரண்டு அணு உலைகள் முதல்கட்டமாக அமைக்கப்பட்டு முதல் அணுஉலை மின் உற்பத்திக்கு தயாராக உள்ளதாக அதன் நிர்வாகம் கூறியுள்ளது.

இத்தகைய நிலையில் அப்பகுதி மக்களோடு இணைந்து அணுசக்திக்கு எதிரான அத்தனை மக்களும் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று போராடி வருகின்றனர். இவர்களது கோரிக்கை கூடங்குளத்தோடு மட்டும் நிற்கவில்லை. உலகின் எந்த மூலையிலும் அணுசக்தியைப் பயன்படுத்தவேண்டாம் என்ற உலகளாவிய கோரிக்கையாகவும், அதற்கான ஒன்றுபட்ட பேராட்ட முகமும், முகமாமுமாகவே கூடங்குளம் திகழ்கிறது.

இந்தப் போராட்டம் 2 ஆண்டுகளை இன்றுடன் (17.8.2013) கடக்கிறது. அறப்போராட்டம். அகிம்சைப் போராட்டம் என்றெல்லாம் காகிதங்களில்தான் படித்திருப்போம். ஆனால் கண்முன்னே நடைபெற்றுவரக்கூடிய ஒரு அறப்போராட்டம் தொய்வில்லால் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இதோ பார் மின் உற்பத்தி, அதோ பார் மின் உற்பத்தி என ஆளும் மத்திய அரசு அறிவித்தாலும் இன்னமும் மின் உற்பத்திக்கான ஒரு சிறு கீற்றுக்கூட கண்களுக்குத் தெரியவில்லை. மக்களின் பேராட்டமும் ஓயவில்லை.

சரி..இப்படிப் போராடுவதால் இந்த மக்களுக்கு என்ன பலன்? அணு உலை
நிர்வாகத்திடம் கேட்டால் இப்பகுதி மக்களுக்கு மாட மாளிகைகள் கூட கட்டித்தர அவர்கள் தயார். ஒவ்வொரு குடும்பமும் உட்கார்ந்து உண்ணும் அளவுக்கு பணம் தரக்கூட அணு உலை நிர்வாகமும், ஆளும் மத்திய அரசும் தயார். ஆனால், அதைக் கனவில் கூட தீண்டிடாத இம்மக்கள் ஒவ்வொரு நாளும் உழைத்து உழைத்து அதில் கிடைக்கும் பணத்தில் பத்து சதவீதம் பணத்தை பொதுப்போராட்டத்திற்கு தானமாகக் கொடுத்து தொடர்ந்து அணுஉலை வேண்டாம் என பல்வேறு வடிவங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

மின் உற்பத்தி வேண்டாம் என்பதல்ல இவர்களின் குரல். அணுசக்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தொழில்நுட்பத்தைத்தான் இவர்கள் எதிர்க்கின்றனர். அணு உலை ஏற்படுத்தும் கதிர்வீச்சுக்கள், அதில் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் தொடர் பாதிப்புகள், கேன்சர் உள்ளிட்ட நோய்கள், அணுஉலை விபத்து ஏற்படின் அப்பகுதியில் உயிரினங்களே வாழ இயலாமல் ஏற்படும் சூழல், அணுஉலை எரிபொருள் கழிவுகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சு ஏற்படாமல் பாதுகாக்கவேண்டிய எதிர்கால சவால் என…பூமிப்பந்தின் எதிர்காலத்திற்காககவும், ஆரோக்கியத்திற்காகவும் அணுசக்தி இல்லாத தொழில் நுட்பத்தை கொண்டுவரக்கோரும் குரல்தான் இவர்களது குரல்.

இரண்டாண்டுகளைக்கடப்பது பெருமை தரக்கூடியது அல்ல என்றாலும் அத்தகைய சூழலை மத்திய அரசு உருவலாக்கி இருப்பது மத்திய அரசின் தவறே தவிர மக்களின் தவறல்ல.

தங்களுக்காக இல்லை…தங்கள் சந்ததி, பசுமையான, ஆரோக்கியமான பூமிப்பந்திற்காகவும், உயிர்ச்சூழலுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி வரும் கூடங்குளம் போராட்டம் இந்த யுகத்தின் மற்றுமொரு மகத்தான போராட்டம்.

ஆதரவளிப்போம்…..ஆரோக்கியமான சமதர்ம சமுதாயம் அமையக் குரல் கொடுப்போம்.

Leave a Reply