நுழைவுத் தேர்வு என்றாலே சிக்கல்தான்! அதிலும், மனைவியிடம் மார்க் வாங்குவது எந்த நுழைவுத் தேர்வையும்விட சிக்கலான சமாசாரம். நம் ஒவ்வொரு அசைவுக்குமே மார்க் உண்டு. அது எத்தனை மார்க் என்பது மனைவியர் மட்டுமே அறிந்த ரகசியம்.
சில சாம்பிள்கள்…
1. உங்கள் மனைவி, தான் ஆசைப்பட்ட தீனி அயிட்டம் ஒன்றை வாங்கி வரச் சொல்கிறார். உடனே நீங்கள்…
அ. சமர்த்தாகப் போய் வாங்கி வந்து தருகிறீர்கள் (மார்க் 0. ஆமாம். காரணம், அது உங்கள் கடமை!)
ஆ. சாயந்திரம்கூடக் கிடைக்கக்கூடிய அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கி வருகிறீர்கள். (மார்க் 8).
இ. கூடவே உங்களுக்குப் பிடித்த வாழைக்காய் பஜ்ஜி, அவித்த வேர்க்கடலை என ஏதாவது ஒன்றையும் சேர்த்து வாங்கி வருகிறீர்கள். (மார்க் -5. என்ன முழிக்கிறீர்கள்? மைனஸ் ஐந்துதான்!)
2. ராத்திரியில், கதவுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது என்கிறார் உங்கள் மனைவி.
அ. உடனே, நீங்கள் எழுந்து போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள். (மார்க் 0. – அ.உ.க.)
ஆ. அங்கே நிழலாக ஏதோ இருந்து, ‘யாரது!’ ‘ஸ்ஸ¨…’ என்றெல்லாம் குரல் கொடுத்து விரட்டிவிட்டு வருகிறீர்கள். (10)
இ. அந்த சந்தேகாஸ்பதமானதை தடியால் ஒரே போடு போடுகிறீர்கள். அப்புறம்தான் தெரி கிறது, அது உங்கள் மனைவியின் ஆருயிர்ப் பூனை. (-15. பதினஞ்சு மார்க் பணால்!)
3. மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாட…
அ. இரவு அவளை வெளியே ஒரு ஓட்டலுக்கு டின்னர் சாப்பிட அழைத்துச் செல்கிறீர்கள். (0)
ஆ. சாப்பாடு மட்டும்தான்! வேறு கேளிக்கைகள் அங்கே இல்லை. (5)
இ. அங்கே பியர் அருந்தி, மற்றதுகளுடன் சேர்ந்து ஆடி, ராத்திரி பன்னிரண்டு மணி வரை கொட்டமடிக்கிறீர்கள். (-100)
4. உங்கள் தேக வனப்பு எப்படி?
அ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் (&5)
ஆ.தொப்பை வயிறாக இருந்தாலும், அதைக் கரைக்க, தவறாமல் தேகப் பயிற்சி செய்கிறீர்கள். (0)
இ. தொந்தி பற்றிய பிரக்ஞையே இல்லாமல், ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் பனியனும் அணிகிறீர்கள். (-30)
ஈ. எனக்கு மட்டும் தொப்பையா? உனக்கும்தானே! என்று தமாஷ் பண்ணுகிறீர்கள். (-8000)
5. ‘நான் குண்டாகத் தெரியறேனா? என்று கேட்கிறார் உங்கள் மனைவி.
அ. அதற்கு உங்கள் ரியாக்ஷனை தவிர்க்கிறீர்கள். (-5)
ஆ. ஆமாம் என்று ஆரம்பித்து, அதன்பிறகு நீங்கள் என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் (-15)
இ. எந்த இடத்தைச் சொல்கிறாய்? என கேட்டுத் தொலைக்கிறீர்கள். (-35)
6. ஒரு பிரச்னை பற்றி மனைவி பேசுகிறார். அதற்கு நீங்கள்…
அ. வெகு உன்னிப்பாகக் கேட்பது போன்ற உணர்ச்சிபாவத்தை வெளியிடுகிறீர்கள். (0 – அ.உ.க.)
ஆ. முப்பது நிமிடங்களுக்கு பதில் பேசாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். (+50)
இ. நீங்கள் அப்படியே தூங்கிவிட்டீர்கள் என்பதை அவள் பேச்சின் முடிவில் அறிகிறாள். (-3000)
ஹ… ஹ… மனைவியரின் மார்க் சூட்சமம் புரிஞ்சுடுச்சா? பாஸாக வாழ்த்துக்கள்!
-ஜேயாரெஸ்-