Home » குட்டிக்கதைகள் » உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!

குருவிடம் சோகமாய் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, வாழ்க்கையில் நிறைய கஷ்டம். என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்றான்.

‘‘அப்படியா, என்ன ஆயிற்று?’’ வினவினார் குரு.

‘‘நான் செய்து வந்த வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் வந்துவிட்டது. இனிமேல் என்னால் நிமிர முடியாது. இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிட்டது.’’

அவனை அமைதியாய் பார்த்த குரு, ‘‘வா, என்னுடன்’’ என்று, அருகிலிருந்த குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே நிறைய குழந்தைகள். சில தவழ்ந்து கொண்டிருந்தன. சில நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. சில ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே விழுவதும் பிறகு எழுந்து நடப்பதுமாக உற்சாகமாய் இருந்தன.

‘‘இந்தக் குழந்தைகளைப் பார். என்ன தெரிகிறது?’’ என்று கேட்டார் குரு.

‘‘எதுவும் புரியவில்லையே குரு.’’

‘‘இந்தக் குழந்தைகளிடம் ஒரு பாடம் இருக்கிறது. விழுகின்ற எந்தக் குழந்தையும் ‘என்னால் முடியாது’ என்று விழுந்தே கிடக்கவில்லை. உடனே எழுந்திரிக்க முயற்சி செய்கின்றன. எழுந்து ஓடுகின்றன. வாழ்க்கையும் அப்படித்தான்’’ என்றார் குரு.

Leave a Reply