என் சிறு வயது மகனை அருகில் இருந்த சலூனுக்கு அழைத்துப் போயிருந்தேன். காலியாக இருந்த நாற்காலியில் பையனை உட்கார்த்தி, சலூன்காரர் கட்டிங் செய்யத் தொடங்கிய பிறகுதான் கவனித்தேன்… எதிரே சுவரில் படு கிளாமராக ஒரு போஸ்டர்!
நீலப் பூக்கள் இறைத்திருந்த சிக்கன் பிராவும் ஜட்டியும் அணிந்திருந்த அழகி ஒருத்தி, கடற்கரை மணல் துகள்கள் உடம்பில் ஆங்காங்கே ஒட்டியிருக்க, உல்லாசமாக மல்லாந்து படுத்திருந்தாள். சலூன்காரர் புதுசாகக் கொண்டு வந்து ஒட்டியிருக்கிறார்.
முன்பே தெரிந்திருந்தால், மகனை வேறு சலூனுக்கு அழைத்துப் போயிருப்பேன்.
கட்டிங் முடிந்து வீடு திரும்புகிற வழியில் மகன் கேட்டான்…
“அப்பா! பீச்ல ஒரு லேடி படுத்திருக்கிற மாதிரி ஒரு படம் ஒட்டியிருந்துதே, பார்த்தியா?”
அவனது கேள்வியில் நான் விக்கித்து நிற்க, அவனே தொடர்ந்தான்.
“அந்த லேடி பக்கத்துல ஒரு சாக்லெட் டப்பா இருந்துதே… அந்த சாக்லெட் பக்கத்துக் கடையில இருக்குப்பா! வாங்கித்தர்றீங்களா??”
நான் உணர்ந்து கொண்டேன் # யாருக்கு எது தேவையோ அதில் தான் பார்வை செல்லும்.