சுமார் 400 கிலோகிராம் எடையுள்ள இளைஞர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்டர்பில்லர் வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
மைக்கல் லெபேர்கர் எனும் இந்த இளைஞர் ஜேர்மனியின் ரீகல்ஸ்பேர்க் நகரில் வசிக்கிறார். அண்மையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால், 400 கிலோ எடையைக் கொண்டிருந்த மைக்கல் லெபேர்கரை தூக்கிச் செல்ல முடியவில்லை. அதையடுத்து அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் தீயணைப்புத் துறையினரும் மருத்துவ ஊழியர்களும் விரைந்து வந்தனர். ஆனால் அவ்வீட்டின் கதவுக்கூடாக மைக்கலை தூக்கிச்செல்ல முடியவில்லை. அதனால் ஜன்னலுடன் இணைந்த சுவரொன்றை உடைக்க வேண்டியிருந்தது.
மண் அகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் கெட்டர்பில்லர் இயந்திரத்தின் மூலம் வீட்டிலிருந்து பாதுகாப்பாக தூக்கிவரப்பட்டு மைக்கல், நான்கு நோயாளிகள் பயணம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
29 வயதான மைக்கல் லெபரை வீட்டிலிருந்து வெளியே கொண்டுவருவது முதல் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது வரையான பணிக்கு சுமார் 6 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.
இந்நடவடிக்கையை மேற்கொண்ட குழுவின் தலைவர் வோல்கர் கிளெய்ன் கருத்துத் தெரிவிக்கையில், தனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு நிலைமையை முன்னர் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை எனக் கூறியுள்ளார்.