சவூதி அரேபியாவின் சவூதியா விமானசேவையின் விமானப் பணிப்பெண்ணொருவர் வெளிநாட்டுப் பயணிகளை டார்லிங் என அழைத்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதப்பட்ட இமாம் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இரு குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட சம்பவ மொன்று அண்மையில் சவூதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ரியாத்திலிருந்து ஜித்தா நோக்கி பயணித்த சவூதியா விமானத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால் சவூதி அரேபியாவின் உள்ளூர் விமான சேவை ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக தாமதமாகியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிடுகையில், சவூதியா விமானப் பணிப்பெண்ணொருவர் வெளிநாட்டு பயணிகளை டார்லிங் என அழைத்துள்ளார்.
இதனை செவிமெடுத்த காலிட் அல் முஹைஷி என்ற பள்ளிவாசல் இமாம் ஒருவரும் பொலிஸ் ஒருவரும் அவ்வார்த்தையை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளனர்.
ஆனால் பணிப்பெண் அவர்களின் வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து முஹைஷி கூறுகையில், நாங்கள் உம்றா செய்வதற்காக குடும்பத்துடன் பயணித்திருந்தோம். இதன்போது பணிப்பெண் எங்கள் முன்னிலையில் அசிங்கமாக பேசினார்.
ஆனால் குறித்த பணிப்பெண்ணை பாதிக்கப்பட்டவராகவும் எங்களை குற்றவாளியாகவும் இனங்கண்டு எங்களது குடும்பத்தினை விமானத்தை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
மேலும் நள்ளிரவில் விமானநிலைய சிறை யிலடைத்து பின்னர் பிணையில் விடுதலை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.