அசுத்தமான நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் இயத்திரங்களைப் போல உங்களது வியர்வையை குடிநீராக்கும் இயந்திரமொன்றினை ஸ்வீடனைச் சேர்ந்த குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
“ஸ்வெட் மெஷின்” (வியர்வை இயந்திரம்) என இவ்வியந்திரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற கால்பந்தாட்ட தொடரொன்றின் போது இவ்வியந்திரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது,
வியர்வையை குடிநீராக்கும் இவ்வியந்திரத்தினை பொறியியலாளர் அன்ரியஸ் ஹெம்மரின் தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. மேலும் உயர் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள வடிப்பான்களை ஸ்டொக்ஹோமிலுள்ள ரோயல் எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த இயந்திரத்தின் மூலம் வியர்வை படிந்த துணிகளை இட்டால் அதனை உலர வைத்து வியர்வையிலுள்ள 99 சதவீதமான நீரை சுத்திகரித்து குடி நீராக தருமாம். ஏற்கனவே 500க்கு அதிகமானவர்கள் இந்த இயந்திரத்தின் பயன்பாட்டை அனுபவித்துள்ளனர் என குறித்த புத்தாக்க குழு தெரிவித்துள்ளது.
மேற்படி புத்தாக்க குழுவின் கண்டுபிடிப்புக்கு டிப்போர்டிவோ என்ற விளம்பர நிறுவனம் யுனிசெப் உடன் இணைந்து உதவி புரிந்துள்ளது.
இது குறித்து டிப்போர்டிவோ நிறுவனத்தின் ஆக்கத்திறன் பணிப்பாளர் ஸ்டீபேன் ரொன்ஜ் கூறுகையில், இத்திட்டம் நாசாவிடமிருந்து வந்தது. விண்வெளி வீரர்கள் தமது சிறுநீர் மற்றும் வியர்வையை உள்ளிட்டவற்றறை மீள்சுழற்சிக்குட்படுத்த வேண்டி உள்ளனர்.
இப்புதிய கண்டுபிடிப்பானது ஆபிரிக்கா, ஆசியா மற்றும் உலகின் மேலும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தவிர்ப்பதனை நோக்காகக்கொண்டது. இந்த இயந்திரத்தின் மூலம் பெறப்பட்ட நீரை அருந்திய ஒருவர் சுவையாக இருப்பதாக தெரிவித்தார் எனத் தெரிவித்துள்ளார்.