Home » கொறிக்க... » கட்டுரைகள் » எம்.ஜி.ஆர் பிழைச்சது என் தாலி பாக்கியம் மட்டுமில்ல. அது இந்த வாலி பாக்கியத்தாலும்தான்!

எம்.ஜி.ஆர் பிழைச்சது என் தாலி பாக்கியம் மட்டுமில்ல. அது இந்த வாலி பாக்கியத்தாலும்தான்!

vaali2பதினைந்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வாலி வியாழனன்று மாலை 5.05 க்கு இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். அவருக்கு வயது 82. இது சாகிற வயதுதான் என்றாலும் தமிழ்சினிமாவுலகமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது. ஏனென்றால் வாரிக்கொடுக்க முடியாத வைரமல்லவா அவர்?

எத்தனை பல்லவிகள், எத்தனை சரணங்கள், எத்தனை வரிகள், அதில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! இப்படி வாலியை வியக்கிற ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் அவருடனான சந்திப்புகளை பூங்காவில் காற்று வாங்கியது மாதிரியும், கடற்கரையில் கால் நனைத்தது மாதிரியும் நினைவு கூர்ந்து பார்ப்பதுதான் வாலியின் சிறப்பு.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டை சொன்னால் உங்களுக்கு புரியும்.

ஒருமுறை கண்ணதாசன் தலைமை தாங்கிய பட்டிமன்றம் ஒன்று. தலைப்பு -கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?

வாலி ஒரு அணியில் நின்று வாதிட்டுக் கொண்டிருந்தார். காரசாரமான கலகலப்பான விவாதங்களுக்கு நடுவில் கண்ணதாசன் ஒரு கேள்வி கேட்டார் வாலியிடம். விடுங்க கவிஞரே… இந்த ரெண்டு பேர்ல யாரு மேல்? அதை சொல்லுங்க என்றார் முத்தாய்ப்பாக. அதற்கு வாலி சொன்னார், ‘ஐயா… ரெண்டு பேருமே ஃபீமேல்!’

*******

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் வாலிக்கும் பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் இருவரும் அன்போடு பழகிய நாட்கள் நிறைய உண்டு. புரட்சித்தலைவர் உடல் நலம் குன்றி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்த நேரம், தமிழகத்தில் திரும்புகிற திசையில் எல்லாம் ஒரு பாடல்தான் ஒலித்தது. அது..? ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல். ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை எழுதியவர் வாலி.

இந்த பாடலும் தமிழக மக்களின் பிரார்த்தனையும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை மீண்டும் இந்த மண்ணுக்கு உயிரோடு கொண்டு வந்து சேர்த்தது. அதற்கப்புறம் எம்ஜிஆரை சந்திக்க அழைக்கப்படுகிறார் வாலி.

அந்த சந்திப்பின் போது திருமதி ஜானகி அம்மையார் இந்த பாடலை குறிப்பிட்டு சொன்னாராம். என் கணவர் பிழைச்சது என் தாலி பாக்கியம் மட்டுமில்ல. அது இந்த வாலி பாக்கியத்தாலும்தான்!

*******

இன்னொரு சம்பவம். இராம நாராயணன் இயக்கிய துர்கா திரைப்படம் வெளிவந்த சில தினங்களிலேயே தைப்பூசம் என்ற படத்தை துவங்கினார் அவர். பாடல் கம்போசிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாலிக்கு பாடலின் சுச்சுவேஷனை சொன்னார் இராம.நாராயணன்.

நல்ல பாம்பு ஒன்று ஒரு கடிதத்தை எடுத்து வருகிறது. அதில் மனைவி கர்ப்பமாக இருக்கிற தகவல் எழுதப்பட்டிருக்கிறது. அதை படிக்கிற ஹீரோ சந்தோஷப்படுகிறார். இந்த இடத்தில் ஒரு பாட்டு வேணும்ணே என்றார்.

அந்த நேரத்தில் சென்னை நகர விநியோகஸ்தர் நாகராஜன் கதவை தட்டிவிட்டு உள்ளே வருகிறார். வந்தவர் இராம.நாராயணனிடம் ‘சார்… துர்கா படம் செம ஹிட்டு’ என்கிறார். அவ்வளவுதான். ‘பல்லவியை எழுதிக்கங்க’ என்று பேச ஆரம்பிக்கிறார் வாலி.

அண்ணே அண்ணே
அன்பு அண்ணே
நாகராஜனே…
நல்ல செய்தி
கொண்டு வந்த
நல்ல அண்ணனே…

—————————————————————————————————-

ஒரு முறை வாலியிடம் கேட்டார்களாம். வாலின்னு பேரு வச்சுருக்கீங்க. அப்படின்னா நீங்க பெரிய பலசாலியாக அல்லவா இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் எதிராளியின் பலத்தை பாதி ஈர்த்துக் கொள்கிற சக்தி பெற்றவரல்லவா வாலி?

இதற்கு கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார் வாலி. ‘நான் சந்தித்தவர்கள் யாரும் பயில்வான் இல்லையே!’

வாலி அப்படி அடக்கமாக சொல்லிக் கொண்டாலும் இலக்கிய உலகின் எழுத்துலகின் பலசாலி எங்கள் வாலிதான். இப்போதும்… எப்போதும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave a Reply