கவிதையால் கடந்த அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தைத் தாலாட்டிய வாலி, இரண்டு வாரங்களாக செயற்கைச் சுவாசத்தால் நாட்களை நகர்த்திக்கொண்டு இருந்தார். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு நுரையீரலில் பாதிப்பு, டி.பி. தாக்குதல் என்றும் மருத்துவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். திங்கள்கிழமை காலையில் நினைவை இழந்து வியாழக்கிழமை மாலையில் மெள்ளப் பிரிந்தது உயிர்.
கடந்த ஒருமாதமாகவே அவருக்கு மருத்துவமனை வாழ்க்கை. அழகிய சிங்கர் பற்றி புத்தகம் எழுதவேண்டும் என்பது வாலியின் வெகுநாள் ஆசை. அந்தப் புத்தகம், ஜூன் முதல் வாரம் வெளியானது. அதில் இருந்தே, ‘என்னோட பெரிய கடமை முடிஞ்சிருச்சுய்யா…’ என்று சொல்லி வந்தார் வாலி. மறுநாள், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாதாரண சிகிச்சைப் பிரிவிலும், தீவிர சிகிச்சைப் பிரிவிலும் மாறிமாறி வைக்கப்பட்டார். ‘வீட்டில் இருப்பதைவிட மருத்துவமனையில் இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும்’ என்று சொன்னதால் அங்கேயே தங்கினார். அவரைப் பார்க்க பலரும் வர ஆரம்பித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
‘ஏ.ஆர்.ரஹ்மான் வந்தாரு… சிவகுமார் வந்தாரு… ராஜாத்தி அம்மா வந்தாங்க… கலைஞரு வருவாரு.. ஆனா, வெளிக்கி வரமாட்டேங்குதே!’ என்று தன்னுடைய உடல் உபாதையைக்கூட ஜோக்காக மாற்றிக்கொண்டு மருத்துவமனையில் இருந்தார் வாலி.
செயற்கை சுவாசம் இல்லாமல் அவரால் இருக்க முடியாத சூழ்நிலை வந்தது. சுவாசக் கருவியை அப்படியே வைத்திருந்ததால் முகத்தில் அழுத்தி முகமும் வீங்கும் அளவுக்குப் போனது. ஏதாவது சொல்வதற்காக அதை எடுத்தாலும் உடனே அதை அவரே பொருத்திக்கொண்டார். ‘நான் ஒரு இந்து. ஆனா மாஸ்க் இல்லாமல் இருக்க முடியலையேய்யா!’ என்று அப்போதும் கமென்ட் அடித்துள்ளார். நாளிதழ் படிக்கவில்லை, டி.வி. பார்க்கவில்லை என்றாலும் செய்திகளை அதிகமாக துளாவிக் கேட்டபடியே இருந்தார். ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி வெற்றி பெறுவாரா, விஜயகாந்த் வேட்பாளர்தான் ஜெயிக்க முடியாதே அப்புறம் எதுக்காக போட்டி போடுகிறார் என்றெல்லாம் கேட்டாராம். தி.மு.க. முன்னாள் எம்.பி. திருச்சி சிவா தன்னைப் பார்க்க வந்தபோது, ‘உங்கள் மனைவி உடல்நலம் எப்படி இருக்கு?’ என்று கேட்டுள்ளார். இந்த மாதிரியான அதீத அக்கறையில் இருந்த வாலி, இரண்டு வாரங்களுக்கு முன் திடீரென்று, ”பாட்டு எழுதுறதுக்காக நான் மூணு பேரிடம் அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். அவங்க மூணு பேரையும் வரச்சொல்லி கொடுத்துடுங்க” என்று சொல்லி இருக்கிறார். செக்குகளிலும் கையெழுத்து போட்டுவிட்டார். ”பணத்தை வாங்கிட்டு பாட்டு தராம போயிட்டான்யான்னு என்னை யாரும் சொல்லிடக் கூடாது” என்று சொல்லி இருக்கிறார்.
இதில் ஒரு தயாரிப்பாளர், வாலியைப் பார்க்க வந்துள்ளார். ”அவரிடம் பணத்தை கொடுத்தாச்சா?” என்று கேட்டுள்ளார் வாலி. ”இனிதான் தரணும்” என்று சொல்லி இருக்கிறார்கள். ”உடனே கொடுத்திருங்க” என்று பதற்றம் அடைந்துள்ளார். ஆண்டாள் பற்றி படம் எடுப்பதாகச் சொல்லி நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன், வாலியிடம் அட்வான்ஸ் கொடுத்தாராம். அதை வாங்கிய வாலி அந்தப் பார்சலைப் பிரிக்காமல் வீட்டில் வைத்திருந்தாராம். ”ராஜகுமாரனிடம் அதைக் கொடுத்துடுங்க” என்று கறாராகச் சொல்லி இருக்கிறார்.
மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், இயக்குநர் வசந்தபாலனின் ‘தெருக்கூத்து’ படத்துக்கு பாடல் எழுதி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. இதற்காகவே வாலியிடம் வந்து, அதிக நேரம் பேசி இருக்கிறார் ரஹ்மான். சங்கரதாஸ் ஸ்வாமிகள் காலத்து இசை சம்பந்தப்பட்ட கதை என்பதால், ரஹ்மான் எந்த மாதிரியான பழைய படங்களைப் பார்க்க வேண்டும் என்பது முதல் என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பது வரை ஆர்வத்துடன் பாடம் எடுத்துள்ளார். ‘நான்கு பாட்டு கேட்டாங்க…. மூணு தான் கொடுக்க முடிஞ்சது… ஒரு பாட்டு எழுத முடியலையே’ என்று மருத்துவமனையில் சொல்லிக்கொண்டே இருந்தாராம் வாலி.
இப்படி நல்ல நினைவாற்றலுடன் இருந்தவருக்கு கடந்த வாரத்தில் சோர்வு அதிகமானது. ‘பேச வேண்டாம்.. ஏதாவது சொல்ல வேண்டுமானால் எழுதிக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
‘சுவாசம் மிக மோசம். நரசிம்மரே பயப்படுகிறார். அன்புசால் நரசிம்மன் எப்படியாவது உடலைக் காப்பாற்றவும். அன்புசால் வாலி’ என்று எழுதி இருக்கிறார். நரசிம்மன் என்பது அவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட மருத்துவர்.
எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு கதை சொல்லி, கவிதை சொல்லி மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக்கொண்டு இருந்த வாலி, முதல்தடவையாக வருத்தப்பட வைத்துவிட்டார்!
வாலிபக்கவிஞர் வாலி மறைந்தார்.!!!
ஆனால் அவரின் வைரத்தையொத்த வரிகள் …..???
#மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ…..
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ…..
#இருக்கிறானா? இல்லையா?
எனும் அய்யத்தை எழுப்புவது இருவர்;
ஒன்று – பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன பிரபாகரன்!
#ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்
#மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
#ஆணிப்பொன் தேர்கொண்டு மாணிக்கச் சிலையென்றுவந்தாய் நின்றாய் இங்கே….
காணிக்கைப் பொருளாகும் காதல் என் உயிராகும்
நெஞ்சை தந்தேன் அங்கே…
#இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்.
#வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு…
#இசைத் தட்டுகளில் மட்டுமல்ல – எங்கள் நாக்குகளிலும்
உன் படப் பாடல்கள் பதிவாகி யிருக்கின்றன !
உன் மரணத்தால் ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான் ! (கண்ணதாசன் மறைந்தபோது வாலி எழுதிய இரங்கல் கவிதை)