அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான பரோன் டேவிஸ், தன்னை வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்கு கடத்திச் சென்று மீண்டும் பூமியில் இறக்கிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி தான் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
34 வயதான பரோன் டேவிஸ் 6 அடி 3 அங்குல உயரமானவர். அமெரிக்காவின் பல்வேறு கழகங்களுக்காக விளையாடியவர். இரு தடவைகள் அமெரிக்க அனைத்து நட்சத்திர அணியிலும் இடம்பெற்றவர். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நியூயோர்க் நைக்ஸ் கழகத்துக்காக விளையாடியவர். 2001 ஆம் ஆண்டு குட்வில் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியிலும் அவர் இடம்பெற்றார்.
கடந்த வியாழனன்று “த சம்ப்ஸ்” எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அவர், தன்னை வேற்று கிரகவாசிகள், அவர்களின் பிரதான விண்வெளிக் கலமொன்றுக்கு (பறக்கும் தட்டுக்கு) கொண்டு சென்றதாக கூறினார்.
“இரு வாரங்களுக்கு முன் நான் உண்மையில் வேற்றுக் கிரகவாசிகளால் கடத்தப்பட்டேன். லாஸ் வேகாஸிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸுக்கு காரை செலுத்திக் கொண்டிருந்தபோது இது இடம்பெற்றது. அவ்வேளையில் நான் சற்று களைப்படைந்திருந்தேன். திடீரென பெரும் வெளிச்சத்தைக் கண்டேன். பாரிய ட்ரக் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக நான் நினைத்தேன்.
அதன்பின் நான் பாதியளவு மனிதர்களைப் போன்ற அவலட்சணமான நபர்களைக் கண்டேன். அவர்கள் என்னை தமது விண்வெளி ஓடத்தின் மூலம் தமது பிரதான கலத்துக்கு கொண்டு சென்றார்கள்.” என பரோன் டேவிஸ் கூறினார்.
இதற்குமுன் வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டையும் வேற்றுக்கிரக வாசிகள் போன்ற இனந்தெரியாத நபர்களையும் கண்டதாகவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால், பறக்கும் தட்டுவாசிகளால் பூமியிலுள்ள மனிதர் ஒருவர் தமது பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டதாக அல்லது பறக்கும் தட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பரோன் டேவிஸ் கூறுவதை மேற்படி நிகழ்ச்சியை நடத்திய நீல் பிரெனன், மோஷ் கேஷர் ஆகியோர் கூட நம்பவில்லை. “நீங்கள் சீரியஸாக சொல்கிறீர்களா? என செவ்வி கண்டவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
“ ஆமாம். உண்மையாக. அவர்கள் எனது மூக்கில் குத்தினார்கள். எனது கண்களை உற்று நோக்கினார்கள்” என டேவிஸ் பதிலளித்தார். அவர் தனது கூற்றுகளை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்ட பல வாய்ப்புகளையும் நிராகரித்தார்.
“எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. அதன்பின் நான் மொன்ட்பெல்லோவில் (லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஒரு நகரம்) இருந்தமைதான் எனக்குத் தெரியும்” என பரோன் டேவிஸ் சத்தியம் பண்ணாத குறையாக கூறினார். அதையடுத்து இத்தகவல்கள் அமெரிக்காவின் பல முக்கிய ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வெளியாகின.
ஆனால், இருநாட்களின் பின்னர் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில், வேற்றுக்கிரகவாசிகள் விடயம் ஒரு ஜோக் என பரோன் டேவிஸ் தெரிவித்தார். அதே டுவிட்டர் செய்தியில் “எனக்கு உதவுங்கள். என் வீட்டுக்கு வெளியே கறுப்பு உடையணிந்த நபர்கள் நிற்கிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பரோன் டேவிஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியவை உண்மையா அல்லது பின்னர் டுவிட்டரில் கூறியது உண்மையா என பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதாக கூறி இரண்டு நாட்கள் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவரச் செய்த பரோன் டேவிஸுக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.