பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது வீட்டின் அறையொன்றில் முழுக் கிராமமொன்றை சிறிய அளவில் உருவாக்கியள்ளார்.
இந்த கிராமத்தில் மாதிரி வீடுகள், கட்டடங்கள், வீதிகள், பாலங்கள், பூங்கா அனைத்தும் சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்கள், நாய்கள் போன்று சிறிய பொம்மைகளையும் அக்கிராமத்தில் அவர் பொருத்தியுள்ளார்.
லில்லி பார்ட்டன் எனும் இப்பெண் 73 வயதானவர். தான் உருவாக்கிய கிராமத்துக்கு “பார்ட்டன் விலேஜ்” என அவர் பெயரிட்டுள்ளார்.
இந்த “கிராமத்தில்” உள்ள வீடுகளில் தளபாடங்கள், மின்சார இணைப்பு ஆகியனவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. லில்லியின் 83 வயதான கணவர் டெரக் பார்ட்டன் ஓய்வு பெற்ற கட்டட நிர்மாண ஊழியர். தனது கணவர் பெரிய கட்டடங்களை உருவாக்கிக் கொண்டிருக்க லில்லி சிறிய மாதிரியுருக்களால் வீட்டிற்குள்ளயே கிராமத்தை உருவாக்கினார்.
தனது வீட்டிலிருந்த மேலதிக படுக்கை அறையொன்றில் கடந்த 15 வருடங்களாக கட்டம் கட்டமாக இந்த கிராமத்தை லில்லி பார்ட்டன் உருவாக்கினாராம். இப்போது அந்த அறை நிறைந்துவிட்டதால் தனது கிராம அபிவிருத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக லில்லி கூறுகிறார்.