அலுவலக ஊழியர்கள் மிகவும் அதிகமாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறைவாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கிறார்கள்.
பிற்பகல் 2.55 மணி ஆகும்போதுதான் அதிகமான ஊழியர்கள் வேலைசெய்யாமல் சோர்வாக இருக்கிறார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அலுவலகங்களில் உற்பத்தித்திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்பகல் 2.55 மணிதானாம்.
அலுவலக ஊழியர்கள் மதிய உணவு உட்கொண்டு முடித்துவிட்டு இருக்கும் நேரம் அது. அவ்வேளையில், பெரும்பாலான ஊழியர்கள் பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றினால் ஈர்க்கப்படுகிறார்களாம். குறித்த நாளின் மாலைவேளையில் என்ன செய்வது என்பது குறித்து பிற்பகல் 2.55 மணியளவில் சிந்திக்க ஆரம்பிப்பதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
http://londonoffices.com எனும் அலுவலக சேவை நிறுவனத்தின் நிபுணர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த சுமார் 200 ஊழியர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. குறித்த நேரத்தில் சிறந்த கோப்பி, தேநீரும் சொக்லேற்றும் உட்கொண்டால் மீண்டும் உற்சாகம் ஏற்படும் என உணர்வதாக பலர் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று உற்பத்தித்திறன் அதிகமாக காணப்படும் நேரம் காலை 10.26 மணி என மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக உற்பத்தித் திறன் மிகுந்த இரண்டாவது நேரம் மாலை 4.16 மணி எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக மக்கள் வேலையை பூர்த்திசெய்வதற்கு அவசரம் காட்டும் தருணம் அதுவாம்.
ஆய்வில் பங்குபற்றியவர்களில் அலுவலக ஊழியர்களில் பெரும்பலானோர். வேலை நேரம் முடிவடைவதற்கு 18 நிமிடங்களுக்கு முன்னதாகவே தாம் உளவியல் ரீதியில் பணிநேரத்தை “முடித்துவிடுவதாக” ஒப்புக்கொண்டுள்ளனர். அதேவேளை, 72 சதவீதமானோர் தாம் சராசரியாக கடமை நேரத்தின் பின்னரும் 10 நிமிடங்கள் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.