கத்தியைக் காட்டி மிரட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்ணொருவர் கொடுத்த முறைப்பாட்டினால் கைது செய்யப்பட்ட டெக்ஸி சாரதி ஒருவர் கையடக்கத் தொலைபேசியிலிருந்த எப்ஸ் (Apps) எனும் மென்பொருளினால் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் பின்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்த 27 வயதான அஸ்ரிக் பேர்விக் என்ற பெண்ணே மேற்படி போலியான முறைப்பாட்டினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
இப்பெண் தனது முகத்தில் தானே வெட்டிக்கொண்டு, நொட்டிங்ஹாமிற்கு அருகிலுள்ள கால்டன் எனுமிடத்தைச் சேர்ந்த 45 வயதான மொஹம்மட் ஆஸிப் என்ற டெக்ஸி சாரதி, அவரது டெக்ஸியில் வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆஸிப் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தான் வழக்கமாக எனது காரில் பயணிக்கும் பிரயாணிகளின் கதைகளை எனது சம்சுங் எஸ் கையடக்கத் தொலைபேசியிலுள்ள எப்ஸ் மூலம் பதிவு செய்வதாக கூறியுள்ளார்.
பின்னர் அந்த பதிவுகளை செவிமடுக்கையில் ஆஸிப் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் தான் போலியாகவே முறைப்பாடு செய்ததாக அஸ்ரிக் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால் அப்பாவியான ஆஸிப்பை விடுதலை செய்துள்ளனர் பொலிஸார். ஆனால் ஆஸிப் மீது போலியான குற்றச்சாட்டைச் சுமத்திய அஸ்ரிக்கு நீதிமன்றம் 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து ஆஸிப் கூறுகையில், உண்மையில் எனது வாழ்க்கையில் பெரிய களங்கத்தை ஏற்படுத்த முனைந்தார். அதிலிருந்து நான் மீண்டு விட்டேன்.
ஆனால், தற்போது வாழ்க்கை கடினமானதாக இருக்கிறது. மேலும் எனது வாகனத்தில் பிரயாணிகளை ஏற்றுவதற்கு பயமாகவுள்ளது. அத்துடன் ஏறும் பிரயாணி ஒரு பெண்ணாக இருக்கக்கூடாது என பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.