சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்.
அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!
நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.
கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.
என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.
துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.
ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.
மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் சாதிக்க முடியும்.
தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.
என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.
நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.
மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.
இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.
முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.
நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!
பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.!
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.
ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.
மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விடயம் உலகில் எதுவும் இல்லை.
தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.
எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.
நாம் வாழ்வதின் நோக்கம் – மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால்இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.
கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்! த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.
சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.
வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.
பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறியவேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது.
தொகுப்பு : J.டானியல் யாழ்ப்பாணம்.
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை