அமெரிக்காவிலுள்ள பிரபல கிராய்ட் கெனியன் எனும் 1500 அடி ஆழமான பள்ளத்தாக்கின் 1400 அடி கொண்ட தூரத்தை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி, கம்பி மூலம் மீது நடந்து சாதனை படைத்துள்ளார் அந்நாட்டைச் சேர்ந்த சாகச கலைஞர் ஒருவர்.
34 வயதான நிக் வலேண்டா எனும் இவர், நேற்று முன்தினம் 22 நிமிடங்களில், மேற்படி தூரத்தைக் கடந்தார். இதன்போது பாதுகாப்புப் பட்டிகள் எதையும் இவர் அணிந்திருக்கவில்லை.
பிரார்த்தனையில் ஈடுபட்டவாறே தான் கம்பி மீது நடந்து சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். பயணத்தின் கடைசி சில அடிகளை அவர் துள்ளிக்குதித்து நடந்து சென்றார். அவர் கம்பி மூலம் நடக்கும்போது அக்கம்பிக்கு கீழ் ஹெலிகொப்டர் ஒன்று பறந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாகசப் பயணத்தை நிறைவு செய்த நிக் வலேண்டாவை அவரின் மனைவி, இரு மகன்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் வரவேற்றனர்.
கொலராடோ நதியினால் உருவாக்கப்பட்ட கிராண்ட் கென்யன் பள்ளத்தாக்கை தரைவழியாக கடப்பது அமெரிக்க பழங்குடி மக்களுக்கும் ஏனைய அமெரிக்கர்களுக்கும் பெரும் சவாலான விடயமாக இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பிகள், மீது நடப்பதில் ஏற்கெனவே பல சாதனைகளை படைத்திருந்த நிக் வலேண்டா அடுத்ததாக நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டம் மற்றும் கிறிஸ்லர் கட்டடம் ஆகியவற்றுக்கிடையில் கம்பியின் மீது நடப்பதற்கு தான் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது மனைவியும் மகன்களும் கோரினால் கம்பி மீது நடப்பதை தான் கைவிடத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.