Home » கொறிக்க... » தகவல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் கூகுள் நிறுவனத்துக்கு 118 கோடி அபராதம் பிரான்ஸ் அரசு எச்சரிக்கை

தகவல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் கூகுள் நிறுவனத்துக்கு 118 கோடி அபராதம் பிரான்ஸ் அரசு எச்சரிக்கை

googleபாரிஸ்: அமெரிக்காவின் இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘பிரைவசி’ பாலிசியை கடைபிடிக்காமல் தகவல் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் ரூ.117.94 கோடியை அபராதமாக கட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

இன்றைக்கு இணையதளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றால் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருபவையாக இருப்பவை கூகுள் தளமும், விக்கிபீடியா தளமும் தான். இன்றைய நிலையில் உலகம் முழுவதும் தனது பகாசுர கரங்களால் சுற்றி வளைத்து தன்னை நிலைநாட்டி வைத்திருப்பது கூகுள் நிறுவனம்.

கூகுள் நிறுவனம் தேடு பொறியாக (ஸர்ச் இன்ஜின்) மட்டுமின்றி பல்வேறு சேவைகளையும் அளித்து வருகிறது. ஜிமெயில் எனப்படும் எலக்ட்ரானிக் கடித சேவை, பிளாக் எனப்படும் தனிநபர் இணையதளசேவை, பிளஸ் எனப்படும் கணிப்பொறி உரையாடல் சேவை என அதன் பணிகள் பரந்து விரிந்தவை. ஆனால் பல நாடுகளிலும் சர்ச்சையில் சிக்கும் நிறுவனமாகவும் கூகுள் உள்ளது.

சீனாவில் சர்வர் வைக்காதது மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாதது ஆகியவற்றால் சீனாவுடன் ஏற்கனவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதும் இணையங்களில் பதிவேற்றப்படும் தங்களது குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான உரிமைகளையும் அந்நாடுகள் சட்டபூர்வமாகவே வழங்கியுள்ளன. எனவே இங்கு தனிப்பட்ட நபர்களின் தகவல்களை இணையதளம் மூலமாக ஊடுருவி பெறுவது என்பது கடுமையான சட்ட சிக்கல்களை உருவாக்கக் கூடியது.

அந்த நாடுகளில் தங்களது சட்ட விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்களை மட்டுமே தங்களது நாடுகளில் அனுமதிப்பது என்று அவை பிடிவாதமாகவும் இருக்கின்றன. இதனால் கூகுள் போன்ற சர்வதேச ஜாம்பவான்களின் பாச்சா அவர்களிடம் பலிக்கவில்லை.தற்போது குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும், மற்றும் அவற்றை வெளியிடாமல் வைக்கும் உரிமை என்கிற விழிப்புணர்வு பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல நாடுகளும் தகவல் உரிமை சட்டத்தில் பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகின்றன.

எப்போதுமே தனிநபர் விருப்பத்துக்கும், உரிமைக்கும் முன்னுரிமை அளித்து வரும் பிரான்ஸ் நாடு தகவல் சட்டத்திலும் அதனை விட்டுவிடுமா என்ன? தற்போது பிரான்ஸ் அரசு கூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தங்களது நாட்டில் கூகுள் சேவையில் உடனடியாக தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த வேண்டும் என்று அது அறிவித்துள்ளது. அதுவும் 3 மாதங்களுக்குள் இந்த ஏற்பாட்டை செய்து தராவிட்டால் ரூ.117.94 கோடி அபராதம் கட்ட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்த எச்சரிக்கை. இல்லையென்றால் சேவையையே ரத்து செய்ய வேண்டி வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.

கூகுள் பிளஸ், யூ&டியூப் போன்றவற்றில் இணையும் பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து அவசர அவசரமாக பிரான்ஸ் நாடு இப்படி ஒரு அதிரடி உத்தரவை கூகுளுக்கு பிறப்பித்துள்ளது.

Leave a Reply