Home » குட்டிக்கதைகள் » ஆட்டுக்குட்டி – குட்டிக்கதை

ஆட்டுக்குட்டி – குட்டிக்கதை

lambஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது.

அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது.

அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர்.

அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் ஏய் எதுக்காக ஒரு கழுதைக் கட்டியைச் சுமந்து செல்கிறாய்? என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான்.

கொஞ்சதூரம் போனவுடன் இரண்டாமவன் எதிரில் வந்து, என்னப்பா எதுக்கு ஒரு பண்ணியைச் சுமந்துட்டுப்போறே? என்று சொல்லிச் சிரித்தான். இவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.

மேலும் கொஞ்சதூரம் போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. அட என்னப்பா செத்த பாம்பெ இப்படியா கழுத்துலெ சுத்திட்டுப் போவாங்க? என்றான். இவனுக்கு உண்மையாலுமே சந்தேகம் வந்துவிட்டது. என்ன இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரியா சொல்லிட்டுப் போறான், நாம்ம வாங்குனது ஆட்டுக்குட்டிதானா அல்லது வேறெதாவது கிரகமா? என்று மிரண்டவனாய் நடந்தான்.

நான்காமவனும் எதிரில் வந்து ஏப்பா தனியா ஒரு பொணத்தத் தூக்கிட்டுப்போறே அப்படின்னு கேட்டான். அவ்வளவுதான் இவனுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது. நாம்ம ஏதோ ஒரு குட்டிச் சாத்தனெ ஆட்டுக்குட்டின்னு நெனைச்சு ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டோம்! தூ கிரகம்! என்று செல்லி அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் புதரில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.

சிறிது நேரத்தில் அது அந்தக் குடிகாரர் நால்வருக்கும் உணவாயிற்று!

நீதி: நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது மிக எளிது.

Leave a Reply