முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக இனிமேல் எழுந்து நடக்கவே முடியாது என எண்ணிய யுவதியொருவர், விளையாட்டு பொம்மைக் காரொன்றில் சிக்கிக் கொண்டதால் முழுமையாக குணமடைந்த சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
16 வயதான ஒலிவியா ஜோன்ஸன் எனும் இச்சிறுமி 2011 ஆம் ஆண்டு கீழே விழுந்ததால் அவரின் முதுகில் அடிபட்டு இடுப்புக்கு கீழ் உணர்வற்ற நிலை ஏற்பட்டது.
சுமார் ஒரு வருடம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற பின்னரும் எழுந்து நடக்க முடியாதிருந்த அவர், நாற்காலியிலேயே நடமாடினார்.
ஆனால் விளையாட்டுக் கார்களில் ஆர்வம் கொண்ட ஒலிவியா, அண்மையில் ஒருநாள் விளையாட்டுக் காரொன்றுக்குள் சிக்கிக் கொண்டாராம். அப்போது அவர் தனது உடலை அசைத்து வெளியேற முற்பட்டபோது அவர் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை எதிர்கொண்டார். ஆம். திடீரென அவரின் கால்களில் உணர்வு ஏற்பட்டது.
இப்போது முழுமையாக குணமடைந்துள்ள அவர், மலையேற்றம் சைக்கிளோட்டத்திலும் ஈடுபடுகிறார்.
“நான் மீண்டும் நடப்பது சாத்தியமில்லை என்றே எண்ணினேன். ஆனால் விளையாட்டுக் காரில் சிக்கிக்கொண்டபின் திடீரென எனது கால்களில் உணர்வு ஏற்பட்டதை அறிந்தேன்” என்று கூறும் ஒலிவியா நேற்று முன்தினம் 5 கிலோமீற்றர் தூரம் கொண்ட விநோத ஓட்டப்போட்டியொன்றிலும் பங்குபற்றினார்.