இவ் உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை.
அணுக்களைப் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே அணுவை வெற்றிகரமாக பிரித்ததுடன் அணுப் பெளதிகவியலின் தந்தையாக கருதப்படுகின்றார். இவரை இரண்டாம் நியூட்டன் என அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வர்ணித்திருந்தார்.
மேல் நாட்டவர்களுக்கு என்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’’ என அவ்வை திருக்குறள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளமையானது சங்ககாலத்திலும் அணு மற்றும் அறிவியல் தொடர்பில் மக்கள் அறிந்திருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
கம்பரும் அணு தொடர்பாக தனது அறிவினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார்.
‘ சாணினு முளனோர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட கோணினு முளன்….. ” என்ற பாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணுவின் உட்பகுதியை படமெடுத்து விஞ்ஞானிகள் புதிய புரட்சியொன்றை மேற்கொண்டுள்ளனர்.
நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்றே இப் புரட்சியை மேற்கொண்டுள்ளதுடன் அவர்கள் லேசர் மற்றும் நுண்காட்டியின் உதவியுடன் ஐதரசன் துணிக்கையொன்றின் உட்பகுதியை அவதானித்துள்ளனர்.
அணுக்களினுள் உள்ள துணிக்கைகளின் மீது பல தடவைகள் லேசர் உபயோகப்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் அவற்றின் செயற்பாடுகளை சக்திவாய்ந்த நுண்காட்டியின் ஊடாக அவதானிக்க முடிந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக படமொன்றினை 20,000 தடவைகளை உருப்பெருக்கக் கூடிய விசேட வில்லையொன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐதரசனின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் பிற அணுக்களை விட அதன் இலகுவான தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே அதனை ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் தெரிவுசெய்துள்ளனர்.
இதனையடுத்து ஹீலியம் துணிக்கைகளை ஆராய்ச்சி செய்யதொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அணுவினுள் உள்ள துணிக்கைகளை மிகச் சிறியவை என்பதால் இதுவரை காலமும் அதனை படமெடுப்பது சாத்தியமற்றதாக இருந்தது.
தற்போது இதனை விஞ்ஞானிகள் சாத்தியப்படுத்தியுள்ளதுடன் அணுவியல் துறைக்கும் உற்சாகமளித்துள்ளனர்.
இப் பரிசோதனை மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்ததாகவும் குறிப்பாக ஐதரசனை ஆராய்ச்சி செய்வதால் எனவும் இதில் பங்குபற்றிய கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த ஜெப் லண்டீன் தெரிவித்துள்ளார்.