Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » ஆசைதீர வாழ ஆறு வழிகள்

ஆசைதீர வாழ ஆறு வழிகள்

பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷ வாழ்க்கை வாழ ஆசையா? இதோ தம்பதிகள் ஆசை தீர வாழ ஆறு வழிகள்!

உறவு முக்கியம்

திருமண வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதற்கும் தொடரும் உறவு என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண பந்தத்தின் நோக்கமும் அதுவே தான்.

மாறாத அன்பு

எவ்வளவு வழிகளில் முடியுமோ, அவ்வளவு வழிகளிலும், எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறைகளும் `நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று உங்கள் துணையிடம் கூறுங்கள். இந்த வார்த்தைகள் உங்கள் லைப் பார்ட்னரின் உள்ளத்தை அசைப்பதாக இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கைப் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களை சுவையானதாக்கும்.`நான் உன்னை நேசிக்கிறேன்…நீ என் நேசத்துக்குரியவள்’ என்கிற வார்த்தைகள் இங்கே வாழ்க்கையாக மாறும்.

வேறுபட்ட சூழல்

இரண்டு வேறுபட்ட சூழலில் இருந்த இருவர் வாழ்க்கையின் பொருட்டு ஒன்றுசேரும்போது, அன்பு, காதலுக்கு இணையாகவே வாக்குவாதங்களும், சண்டைகளும் எட்டிப்பார்க்கும். இந்த மாதிரியான பிரச்சினைகள் கூட பலநேரங்களில் ஊடலில் இருந்து தான் தொடங்கும்.

பலநேரங்களில் அன்பின்ஆழத்தை அதிகரிக்கவேண்டிய இந்த ஊடலுக்குள் ஈகோ புகுந்து முரண்பாட்டை அதிகரித்து விடும். இந்த முரண்பாடுகளை கோபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துவதால் பாதிப்பு நேரலாம். விபரீதம் உணர்ந்து யாராவது ஒருவர் இறங்கி வரும்போது மட்டுமே மறுபடியும் அன்பு கோலோச்சுகிறது.

கால மாற்றங்கள்

தம்பதியர் ஒருவர் மற்றவரை தரக்குறைவாக எடைபோடக்கூடாது. `இவர் நம்மவர், இவள் நம்மவள்’ என்கிற உணர்வே இதயத்தின்ஆக்கிரமிப்பாக இருக்க வேண்டும்.

இந்த ஆக்கிரமிப்பு மட்டும் கண்மூடித்தனமாக இருந்தாலும் தப்பில்லை. வாழ்க்கை இனிக்குமே. காதல் தம்பதிகளின் விஷயம் இன்னும் சுவாரசியம். காதலிக்கும் பருவத்தில் காதலிக்காக காரின் கதவைத் திறந்து விடுவான் காதலன். அவள் உட்கார வசதியாக நாற்காலியை சரிசெய்து தருவான்.

தெருவில் நடக்கும்போது அவளுக்கு முன் பாதுகாப்பாக செல்வான். காலம் செல்லச் செல்ல அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மதிப்பு குறைந்து விடுகிறது.

ஒரு நேரம் அவர்கள் அனுபவித்த `உன்னதமான நிலை’ காணாமல் போய்விடுகிறது. உணர்வுகளை மதிப்பது குறைகிறது. சிறு விஷயங்கள் கூட பெரிதாக்கப்படுகின்றன. பழைய துன்பங்கள் நினைவுபடுத்தப்படுகின்றன. இதனால் மன அழுத்தத்தைத் தாங்கும் திறன் குறைகிறது.

தம்பதியருக்கு மனஅழுத்தம் பலவிதங்களில் வரலாம். நோய்கள், பணப்பிரச்சினை, தொழிலில் ஏற்றத்தாழ்வுகள், அண்டை அயலாருடன் மோதல், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் வரலாம். இப்படிப்பட்ட தம்பதியினருக்கு மோசமான எதிரி நம்பிக்கை இழப்பு. சந்தேகம் முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும்.

வலியுறுத்துங்கள்

கணவன் குடிகாரனாகவும், மனைவி குறை கூறுபவளாகவும் இருந்து விட்டால், பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மற்றவர்கள் இவர்களை சந்தித்து அளவளாவ ஏற்படும் வாய்ப்புகளின் போது ஒருவர் மீதான மனக்கிலேசத்தை மற்றவர் நாசூக்காக வெளிப்படுத்தலாம். இந்த மறைமுக வலியுறுத்தலுக்கு நாளானாலும் பலன் உண்டு.

தொழிலை மதியுங்கள்

அடுத்தது தம்பதியருக்குள்ளான தொழில் மரியாதை. மனைவியின் வேலை மதிப்பு மிக்கதாக இல்லை என்று கணவன் உதாசீனம் செய்தால், அது அவளைக் கவலைப்படுத்தி விடும். அதே போல், மனைவி உயர்ந்த பதவியில் இருந்து கணவனை விட அதிகம் சம்பாதித்தால், அதனால் உண்டாகும் பொறாமை கணவனை அரித்து விடும். அவன் அவளைப் பலவழிகளில் காயப்படுத்துவான். அலுவலக பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வருவது இருவருக்கும் நல்லதல்ல.

பிரச்சினையின் ஆழத்தை இரண்டு பேரின் பார்வையிலிருந்து பார்ப்பது எப்போதும் நல்லது. இரண்டு பக்கங்களிலுமே மாறுபட்ட கருத்துக்கள் எழலாம். ஆனால், வேற்றுமைகளை உடனே களைய வேண்டும். தாமதமானால், சமாதானம் ஏற்பட தொழில் முறை குடும்பநல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.