Home » காதல் » முதல் பார்வையிலே காதல் வருமா?

முதல் பார்வையிலே காதல் வருமா?

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?

ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.

அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.

பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.

முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.

உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.

காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.

“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.

இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…

எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.